Skip to main content

ஹண்டேவின் அண்டப்புளுகும்! சைதை துரைசாமியின் சரடும்!

saithai


அது என்னமோ தெரியல, அப்பப்ப சர்ச்சையில சிக்கி படாதபாடு படுவதே சென்னை மாநகரத்தின் மாஜி மேயர் சைதை துரைசாமிக்கு பொழுது போக்காப் போச்சு. தி.மு.க.வின் மா.சுப்பிரமணியன் சென்னை மேயராக இருந்த போது, என்னென்ன பண்ணுனார், எதையெல்லாம் பண்ணல என ஒரு பட்டியலை வெளியிட்டார் சைதை துரைசாமி. இதற்கு பதிலடி கொடுத்த மா.சு., சென்னை மாநகரில் சைதை செய்த ஆக்கிரமிப்புகளைப் பட்டியலிட்டார். அதோடு சைலண்டானார் சைதை. சமீபத்தில் கூட ஒரு நில விஷயத்தில் சோழிங்கநல்லூர் மாஜி எம்.எல்.ஏ. கே.பி.கந்தனுக்கும் சைதை துரைசாமிக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.

சரி அந்த அரசியல் மேடையை விட்ருவோம். இப்ப சினிமா மேடைக்கு வருவோம். கடந்த 02—ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் பிரசாத் லேப்பில் ஒரு சினிமா ஃபங்ஷன் நடந்துச்சு. ‘எம்.ஜி.ஆர்’ என்ற டைட்டில் பெரிதாகவும் அதற்கு ஏ ஃபிலிம் ஆன் மக்கள் திலகம்’ என்ற சப்—டைட்டிலுடன் கூடிய படத்தின் டீசர் வெளியீட்டு விழா.

‘காமராஜ்’ –தி கிங் மேக்கர்’ என்ற பெயரில் பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கைப் படத்தை தயாரித்து இயக்கிய அ.பாலகிருஷ்ணன் தான் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையைத் தயாரித்து இயக்கிக் கொண்டிருக்கிறார். பாலகிருஷ்ணனின் தயாரிப்புக்கு கை கொடுப்பவர் அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் வேணுகோபால். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர். எச்.வி.ஹண்டே, இரண்டு வருடங்கள் மட்டுமே எம்.எல்.ஏ.வாக இருந்தவரும் மனிதநேயம் அறக்கட்டளை சார்பாக ஐ.ஏ.எஸ்.பயிற்சி மையம் நடத்துபவருமான சைதை துரைசாமி, கவிஞர் பூவை செங்குட்டுவன், எம்.ஜி.ஆரின் ஹீரோயின் லதா, டாக்டர் பழனி ஜி. பெரியசாமி, ஜேப்பியாரின் மகள் உட்பட சிலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய டாக்டர் ஹண்டே எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட என்ஜிரியங் கல்லூரிகளால் தான், தமிழ்நாட்டில் இப்போது இளைஞர்கள் சந்தோஷமாக இருப்பதாகவும் அதன் பின் ஜெயலலிதா ஆட்சி செய்த 15 ஆண்டுகளில் கல்வி வளர்ச்சி அபரிதமாக இருந்ததாகவும் சொல்லிக் கொண்டே வந்தவர், இதில் கருணாநிதிக்கு கொஞ்சம் உரிமையில்லை. இன்னும் சொல்லப் போனால் கருணாநிதி முதல்வரானதே எம்.ஜி.ஆரால் தான். எனவே கருணாநிதி குடும்பம் அந்த நன்றியை மறக்கக் கூடாது என பிட்டையும் போட்டார் ஹண்டே. எம்.ஜி.ஆரைப் புகழ்வது ஹண்டேவுக்கு வாடிக்கையாக இருக்கட்டும், அதற்காக இப்போது கலைஞரைச் சீண்டுவது ஏன்?

ஹண்டேவின் இந்த அண்டப்புளுகும் தேவையில்லாமல் கலைஞரைச் சீண்டியதும் பலரை எரிச்சலாக்கியது. சென்னை தரமணி ராஜீவ் காந்தி சாலையில் டைட்டல் பார்க் என்ற ஐ.டி.கம்பெனி வளாகத்தை முதல்வராக இருந்த கலைஞர் தொடங்கி வைத்த பிறகு தான், ஓ.எம்.சாலை முழுவதும் ஐ.டி.கம்பெனிகளாலும் கம்ப்யூட்டர் என்ஜினியர்களாலும் நிரம்பி வழிந்தது. அதே போல் முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்க முதல்வர் கலைஞர் கொண்டு வந்த திட்டத்தால் எத்தனை எத்தனை கிராமத்து இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேறியுள்ளனர். லட்சக்கணக்கான ஐ.டி.இளைஞர்கள், பட்டதாரி இளைஞர்கள் கலைஞரால் உருவாகியிருந்ததை, கலைஞரின் இறுதி ஊர்வலமே சாட்சி சொன்னது.

இதெல்லாம் டாக்டராக இருக்கும் ஹண்டேவுக்குத் தெரியாமல் போனது. எம்.ஜி.ஆரைச் சொன்னால் ஒத்துக் கொள்ளலாம், ஆனால் கல்வி வளர்ச்சிக்கு ஜெயலலிதா பாடுபட்டார்னு போட்டாரு பாருங்க அதைத் தான் ஜீரணிக்க முடியல.

அடுத்து மைக் பிடித்தார் சைதை துரைசாமி. மேடையில் மொத்தமே இருந்த ஏழு பேரின் பெயர்களைச் சொல்லவே இருபது நிமிடம் நீட்டி முழங்கிய சைதை துரைசாமி, அதன் பின் தான் மேட்டருக்கே வந்தார். “எம்.ஜி.ஆர்.நடித்த 134 படங்களிலும் நல்ல கருத்துக்கள் இருந்தன. வள்ளல் தன்மைக்கு உதாரணமாக இருந்தவர். சைதாப்பேட்டையில் நெசவுத் தொழிலாளர்கள் போராடிய போது, போராடியவர்களுக்கும் அவர்களின் வீட்டாருக்கும் சேர்த்து 20 ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவர் எம்.ஜி.ஆர். பரமத்தி வேலூர் போன போது எனக்கு சீடை முறுக்கெல்லாம் கொடுத்து எனது பசியைத் தவிர்த்தவர். எம்.ஜி.ஆர். ஒரு அவதார புருஷர்” என்றெல்லாம் எம்.ஜி.ஆர். புகழ் பாடிக் கொண்டே வந்தவர், எங்கள் தங்கம்’ படத்திற்கு எம்.ஜி.ஆர். கால்ஷீட் கொடுத்ததை நினைவு கூர்ந்து முரசொலி மாறன் அப்போது பேசியதாக சரடு ஒன்றைவிட்டார் சைதை துரைசாமி.

“சினிமா எடுத்த வகையில் கையிலிர்ந்த பணமெல்லாம் கரைந்து விட்டது. வீடும் அடமானத்திற்குப் போய்விட்டது. அப்பொழுது புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரும் கலைச் செல்வி ஜெயலலிதாவும் கால்ஷீட் கொடுத்து எங்கள் தங்கம் படத்தை நடித்துக் கொடுத்தனர். அந்தப் படம் மூலம் கிடைத்த லாபத்தால் தான் எங்கள் வீடு மட்டுமல்ல, குடும்ப மானமும் காப்பாற்றப்பட்டது” செல்ஃபோன் வாட்ஸ்—அப் வாந்தியைப் பார்த்து படித்துக் கொண்டே, அப்போது அப்படி இருந்த கருணாநிதி, கலைஞர் கருணாநிதியின் குடும்பம் இப்போது உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருக்கு” என வாந்தி எடுத்து யாருக்கோ முதுகு சொறிந்தார்.

நாம் உடனே இது குறித்து தி.மு.க.சீனியர் ஒருவரிடம் கருத்து கேட்ட போது, “எம்.ஜி.ஆர். பத்துன சினிமா ஃபங்கஷனுக்கு போனோமா, அவரைப் பத்தி நாலு நல்ல வார்த்தை பேசுனோமா, போட்ட சால்வைய கையில வாங்குனோமான்னு இல்லாம சைதை துரைசாமிக்கு ஏன் இந்த வாந்தி எடுக்கும் வேலை? தலைவர் குடும்பத்தைப் பத்தி இவ்வளவு பேசுற சைதை துரைசாமி மட்டும் என்ன மன்னர் பரம்பரையா? வெறும் ரெண்டு வருஷம் மட்டும் எம்.எல்.ஏ.வா இருந்த சைதை துரைசாமியின் இன்றைய சொத்து மதிப்பு எவ்வளவுன்னு யாருக்காவது தெரியுமா?” என்றார் கொதிப்பாய்.

அடடா நாட்ல இந்த அள்ளிவிடுற கோஷ்டியோட தொல்லை தாங்க முடியலப்பா.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்