/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_967.jpg)
தமிழகத்தில் வீடில்லா மக்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.முருகானந்தம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும், அதற்கு அடையாள அட்டைகள் கேட்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் அடையாள அட்டை இல்லாத வீடில்லா மக்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவோ, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவோ முடியாத நிலையில் உள்ளதாகவும், தடுப்பூசி செலுத்தினால் தான் அவர்களின் உயிரை பாதுகாக்க முடியும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
தொற்று பாதிக்கும் அபாயம் அதிகமுள்ள வீடில்லா மக்களை கணக்கெடுத்து, அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் சி.சரவணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், வீடில்லாத மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான வழக்குகளுடன் விசாரிப்பதற்காக தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)