Skip to main content

கரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? 

Published on 02/07/2021 | Edited on 02/07/2021

 

How to protect children from corona third wave?

 

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து புறப்பட்ட கரோனா கிருமி உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. கரோனாவின் தாக்கமும் உருமாற்றங்களோடு அலை அலையாக தாக்கத் தொடங்கியுள்ளது. முதல் அலை முதியவர்களையும் இரண்டாம் அலை இளைஞர்களையும் பறித்துக் கொண்டது. ஆனால், மூன்றாம் அலை குழந்தைகளைப் பாதிக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இந்த மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி என்பது குறித்து புதுக்கோட்டை பச்சிளங்குழந்தைகள் மருத்துவர் இரா. பீட்டர் எம்.டி., டி. எம் விளக்குகிறார்.

 

How to protect children from corona third wave?

 

கரோனா மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி ? 

கரோனா பேரிடர் முதல் அலையின்போது முதியோர்களுக்கும் இரண்டாம் அலையின்போது நடுத்தர வயது மற்றும் இளைஞர்களுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் கணிசமான அளவு உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. தற்போது மூன்றாம் அலை வரலாம் என்றும், அது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதும் பொதுமக்கள், முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரிடமும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கரோனா (டெல்டா பிளஸ்) எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும், மேலும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களையும் தடுப்பூசி போட்டவர்களையும் பாதிக்குமா என்பதைப் பற்றிய ஆய்வுகளும் நடந்த வண்ணம் உள்ளன. மூன்றாவது அலை வரும்பட்சத்தில் அது குழந்தைகளையும் தடுப்பூசி போடாதவர்களையும் அதிகம் பாதிக்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

How to protect children from corona third wave?

 

மூன்றாம் அலையைக் கடப்பார்களா குழந்தைகள் ?

கரோனா முதல் அலையை ஒப்பிடும்போது இரண்டாம் அலையில் குழந்தைகளில் நொய்தொற்றின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது. நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட அநேக குழந்தைகள் சில நாட்கள் காய்ச்சல் மற்றும் சளி என்கிற அளவோடு பூரண குணமடைந்தனர். ஆனால் வெகுசில குழந்தைகள் மட்டும் எம்.ஐ.எஸ்-சி எனப்படும் தீவிர கரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழலும் உருவானது. ஏற்கனவே வயதானவர்களைப் பாதித்துவிட்ட நிலையில், அடுத்து இதுவரை அதிகம் பாதிக்கப்படாத குழந்தைகளையே அதிகம் பாதிக்கும் என்கிற எண்ணம் இயல்பானதுதான். உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி கரோனா நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்புசக்தி குழந்தைகளுக்குச் சற்றே அதிகம் உள்ளதால் அவர்கள் மூன்றாம் அலையின் தீவிரத்திலிருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. முரணாக இருந்தாலும் இது ஆறுதலான செய்திதான்.

 

How to protect children from corona third wave?

 

தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன? 

பெரியவர்கள் மேற்கொள்ள வேண்டிய தடுப்புமுறைகளான தனிநபர் இடைவெளி, கை சுத்தம், முகக் கவசம் அணிதல் போன்றவற்றைக் குழந்தைகளுக்கு நேரடியாக செய்வதில் சிரமங்கள் உள்ளன. ஐந்து வயதிற்கும் குறைவான குழந்தைகள் முகக் கவசம் அணியத் தேவையில்லை. குழந்தைகளுக்குச் செலுத்தக்கூடிய தடுப்பூசிகளும் பரிசோதனை முயற்சி என்ற அளவில்தான் மேற்கத்திய நாடுகளில் உள்ளன. இந்த சூழலில் வீட்டில் பெரியவர்களுக்கு நோய்த்தொற்று வராமல் காக்கும் வழிமுறைகளை அதீத கவனத்துடன் மேற்கோள்வதும், நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக தனிமைப்படுத்துதல் போன்றவற்றால் மட்டுமே குழந்தைகளைக் கரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும். பிறந்த குழந்தைகளுக்கு கரோனா நோய்த்தொற்று வராமல் இருக்க தாய்ப்பால் கொடுக்கும் அனைத்து தாய்மார்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். தாய், கரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் குழந்தைகளுக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பது மிகமிக அவசியம். தாய்பால் மூலம் குழந்தைக்கு கரோனா நோய் பரவாது, மாறாக நோய்க்கு எதிரான அணுக்கள் குழந்தைக்குச் செல்லும். அதன்மூலம் குழந்தைகள் பாதுகாக்கப்படுவார்கள். தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் கைகளைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்துவிட்டு முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். குழந்தைக்கு சத்தான ஆகாரங்களைக் கொடுப்பதும் அட்டவணையின்படி தடுப்பூசி போட்டுக்கொள்வதும் கூடுதல் நோய்எதிர்ப்பு சக்தியை தரும். குழந்தைகளை எக்காரணத்தைக்கொண்டும் வெளியில் அழைத்துச்செல்லக்கூடாது. 

 

How to protect children from corona third wave?

 

குழந்தைக்கு நோய்த்தொற்று வந்தால் என்ன செய்வது?

கரோனா நோய்த்தொற்றுடைய குழந்தைகள் எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம். சில குழந்தைகளுக்கு லேசான காய்ச்சல், சளி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும், மிகச்சில குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். மூச்சுத்திணறல் இல்லாத குழந்தைகளை மருத்துவரின் பேரில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம். மூச்சுத்திணறல் இருந்தாலோ, ஐந்து நாட்களுக்கு மேல் காய்ச்சல் அல்லது குழந்தைகள் சரியாக உணவு எடுத்துக்கொள்ளவில்லை என்றாலோ அவர்களை உள் நோயாளியாக அனுமதித்து தேவையான சிகிச்சைகளைக் கொடுப்பது மிக அவசியம். கரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு நீர்சத்து குறையாமல் இருக்க அரிசி கஞ்சி, இளநீர், பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். உப்புக்கரைசல் போன்றவற்றை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

 

How to protect children from corona third wave?

 

எம்.ஐ.எஸ்- சி பாதிப்பு என்றால் என்ன? 

கரோனா நோய்த்தொற்றினால் மிக அரிதாக குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு ஏற்படும். இதற்கு மல்டி சிஸ்டம் இம்ஃபளமேட்டரி சின்ட்ரோம் என்று பெயர். அதீத சோர்வு, தொடர்ச்சியான காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, தோலில் சிவப்பு தடிப்புகள் மற்றும் கண்கள் சிவந்திருத்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும். சில சமயங்களில் இருதய பாதிப்பும், வலிப்பும் கூட ஏற்படலாம். இந்தக் குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஸ்டீராய்டு மருந்து, ஆஸ்பிரின் மற்றும் ஹிம்முயுனோகுளோபுளின் என்ற சிறப்பு மருந்தும் செலுத்தப்படும். 

 

How to protect children from corona third wave?

 

குழந்தைகளின் மனநலனைப் பாதுகாப்பதன் அவசியம் என்ன? 

கரோனா நோய்த்தொற்று பெரியவர்கள் போலவே குழந்தைகளின் மனதினையும் பாதிக்கும். நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மனதில் நோய்த்தொற்று பற்றிய அச்சம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளோடு அமர்ந்து பேசி அவர்களிடம் உள்ள அச்சத்தைப் போக்க வேண்டும். முடிந்தவரை தொலைக்காட்சி, கைப்பேசி, கணிணி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். குழந்தைகளின் தனிப்பட்ட திறமைகளைக் கண்டறிந்து அதை ஊக்கப்படுத்த வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்