தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (03/01/2021), சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மைக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., குழுவின் தலைவர் திருப்புகழ் இ.ஆ.ப. (ஓய்வு), குழுவின் உறுப்பினர்கள், அரசுத்துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மழைநீர் தேங்காமல் தடுப்பது குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை வழங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதில், தற்காலிகமாக செய்ய வேண்டிய பணிகள் மற்றும் நிரந்தரமாக செய்ய வேண்டிய பணிகள் என்ற அடிப்படையில் விளக்கங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் பகுதிகளில் வடிகால் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் குழு அறிவுறுத்தியுள்ளது.
பருவமழைக் காலத்தில் சென்னை சந்திக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க குழு அமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.