தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உடற்பயிற்சி மீது தீவிர காதல் உடையவர். முதல்வராக இல்லாத நேரத்திலும், தற்போது முதல்வராக பணியாற்றிவருகின்ற சூழலிலும் அவர் காலை நடைபயிற்சி, மாலை உடற்பயிற்சி என்பதை மட்டும் தொடர்ந்து செய்துவருகிறார். தேர்தல் சமயங்களில் கூட அவர் பயணம் மேற்கொள்ளும் இடங்களில் காலை நடைபயிற்சியை விடாமல் செய்துவந்தார். சில நேரங்களில் வாக்கிங் போகும் இடங்களிலேயே தன்னுடைய காலை பரப்புரையை தொடங்கிய சம்பவங்களும் கடந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று (21.09.2021) காலை வழக்கம்போல் அமைச்சர் மா. சுப்பரமணியனுடன் அவர் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது எதிரில் வந்த பொதுமக்கள் அவருடன் பேச முயன்றனர். அவர்களுடன் சிறிது நேரம் முதல்வர் பேசி மகிழ்ந்தார். அப்போது பெண் ஒருவர், “எப்படி நீங்கள் இத்தனை வயதிலும் மார்க்கண்டேயனாகவே இருக்கிறீர்கள்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அதைக் கேட்டு சிரித்த முதல்வர், பதிலேதும் சொல்லவில்லை. மேலும் அங்கிருந்த மற்றவர்கள், அவர் மக்களுக்காக எல்லா திட்டங்களையும் பார்த்துப் பார்த்து செய்வதாக கூறினார்கள். அனைத்தையும் பொறுமையாக கேட்ட அவர், வணக்கம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.