Skip to main content

பெருந்தொற்றுக் காலத்தில் வாடகை வசூலிக்கக் கூடாதெனக் கோரிய வழக்கு! -அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்த உயர் நீதிமன்றம்!

Published on 03/08/2020 | Edited on 03/08/2020

 

chennai high court

 

வாடகைதாரர்களிடம் இருந்து வாடகைக் கட்டணத்தை உரிமையாளர்கள் வசூலிக்கக் கூடாதென தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்யப்போவதாக அறிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், அபாராதமும் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. 

 

சென்னை வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுவில், கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் அறிவித்துள்ள ஊரடங்கு சில தளர்வுகளுடன் தொடர்கிறது. கரோனா ஊரடங்கு காலத்தைக் கருத்தில் கொண்டு, குடியிருப்புவாசிகளிடம் இருந்து நிலம் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்கு வாடகைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மார்ச் 29-ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவைப் பின்பற்றி தமிழக அரசும், பேரிடர் மேலாண்மைச் சட்டம், பெருந்தொற்று நோய்த் தடுப்பு அவசரகாலச் சட்டத்தின் கீழ், வாடகை வசூல் செய்வதற்குத் தடை விதித்து அரசாணை வெளியிட்டது. 

 

ஆனால், பெரும்பாலான வீட்டின் உரிமையாளர்கள்,  ஒரு மாத வாடகையைக் கூட வசூல் செய்துள்ளனர். வாடகை செலுத்தாதவர்கள் காலி செய்யப்பட்டுள்ளனர். பெருந்தொற்றுக் காலத்தில், இதுபோன்ற நடவடிக்கைகள் நோய்த் தொற்று பரவலுக்கு வழிவகுக்கும். தமிழ்நாடு அரசும், ஒரு மாதம் வாடகை வசூல் செய்யக்கூடாது என்று அரசாணை வெளியிட்டது. ஆகவே, பெருந்தொற்றுக் காலத்தில் வாடகை வசூல் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் கேட்டுக் கொண்டிருந்தார். 

 

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு, இது சாத்தியமில்லை என்றும், இதுபோல் தொடரப்பட்ட வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். மேலும், நீதிமன்றத்தில் வாடகைதாரரோ, வீட்டு உரிமையாளர்களோ, யாரும் வழக்கு தொடரவில்லை. இது பொதுநல வழக்கு ஆகாது. மேலும், அரசினுடைய அறிவிப்பு, தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  எனவே, இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்யவுள்ளதாகவும், மனுதாரருக்கு அபராதம் விதிக்கப் போவதாகவும் எச்சரித்தனர். இதையடுத்து, வழக்கை நாளை ஒத்தி வைக்க வேண்டும் என மனுதாரர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப் பொதுநல மனு; மனுதாரருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
The court fined the petitioner on PIL to grant bail to Kejriwal

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘கெஜ்ரிவாலை அவரது பதவிக்காலம் மற்றும் விசாரணை முடியும் வரை நிலுவையில் உள்ள அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ யால் பதிவு செய்யப்பட அனைத்து குற்ற வழக்குகளிலும் இருந்து இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த மனு இன்று (22-04-24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மித் பிரீதம் சிங் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா, “இந்தப் பொதுநல வழக்கு முற்றிலும் அனுமதிக்க முடியாதது. மேலும், தவறான வழிகாட்டுதலானது. மனுதாரர், நீதிமன்றத்தை அரசியல் தளமாக்குகிறார். கெஜ்ரிவால் விரும்பினால், ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார். அப்படி இருக்கையில், அவருக்காக மனு தாக்கல் செய்ய இவர் யார்?. இது விளம்பர நோக்கம் கொண்ட வழக்கு ஆகும்” என்று வாதிட்டார்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘கெஜ்ரிவாலுக்கு உங்கள் உதவி எதுவும் தேவையில்லை. அவருக்கு உதவ நீங்கள் யார்?.’ என்று தெரிவித்தனர். அப்போது, மனுதாரரின் தரப்பில் ஆஜரான கரண்பால் சிங், “முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட கெஜ்ரிவால் இல்லாததால் கடந்த ஒரு மாதமாக அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டு, மக்கள் அவதிப்படுகிறார்கள்” என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள்,  ‘கெஜ்ரிவால் சார்பாக மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த அதிகாரமும் இல்லை. மனுதாரர் சட்டக்கல்லூரி வகுப்புகளுக்கு செல்கிறாரா?. அவர் சட்டக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை என்று இதிலிருந்து தெரிகிறது’ எனக் கூறியும் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறியும் மனுதாரரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.