கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலமங்கலம் அடுத்துள்ள நாகமங்கலம் என்ற பகுதியில் பிரபல தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான செல்போன் தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் மூன்று ஷிப்ட் அடிப்படையில் 24 மணி நேரமும் ஆலை செயல்பட்டு வருகிறது. சுழற்சி முறையில் ஒன்றுக்கு ஷிப்ட் ஒன்றுக்கு சுமார் 1500 முதல் 2000 பணியாளர்கள் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் இன்று (28.09.2024) காலை யாரும் எதிர்பாராத விதமாக தீடிரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயானது தொழிற்சாலையின் பெரும்பாலான பகுதியில் பரவி உள்ளது. இதனால் அந்தப் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.
மேலும், தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களின் நிலைமை குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் இந்த தீ விபத்தில் சிக்கிய பலரை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். செல்போன் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.