Skip to main content

சினிமா பாணியில் 12 கோடி ரூபாய் நகைகள் கொள்ளை; திசை திருப்பிய கொள்ளையர்கள்... காட்டிக்கொடுத்த ஜிபிஎஸ்... பிடிபட்ட 9 பேர் கும்பல்!

Published on 24/01/2021 | Edited on 24/01/2021

 

hosur muthoot finance incident police investigation


ஓசூரில் சினிமா பாணியில், பிரபல தனியார் நகை அடகு நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 12 கோடி ரூபாய் நகைகளை கொள்ளை அடித்த வடமாநில கும்பலை பதினெட்டே மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். கொள்ளையர்கள் நூதனமுறையில் போலீசாரின் கவனத்தை திசை திருப்பினாலும், ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் அவர்களை மடக்கிப் பிடித்த பரபரப்பு பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்- பாகலூர் சாலையில் முத்தூட் பைனான்ஸ் என்ற தனியார் நகை அடகு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்க நகைகளுக்கு அடமானத்தின்பேரில் கடன் வழங்கப்படுகிறது. 


இந்நிறுவனத்தின் கிளை மேலாளராக சீனிவாச ராவ் என்பவர் உள்ளார். மாருதி (24), பிரசாந்த் (29) ஆகியோர் அலுவலக ஊழியர்களாகவும், ராஜேந்திரன் (55) என்பவர் பாதுகாவலராகவும் (செக்யூரிட்டி) பணியாற்றி வருகின்றனர். 


ஜன. 22- ஆம் தேதி காலை 09.30 மணியளவில், சீனிவாச ராவ், மாருதி, பிரசாந்த், ராஜேந்திரன் ஆகியோர் நிதி நிறுவனத்தைத் திறந்து உள்ளே சென்றனர். அப்போது நகைகளை அடமானம் வைப்பதற்காக 3 பேர் வந்திருந்தனர். அவர்களிடம் ஊழியர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், ஹெல்மெட் அணிந்த நிலையில் 2 பேர் உள்ளே நுழைந்தனர். 


சில வாடிக்கையாளர்கள் ஹெல்மெட்டை வண்டியில் விட்டுவிட்டு வந்தால் யாரேனும் தூக்கிச்சென்று விடுவார்கள் என்பதால் அப்படியே தலையில் மாட்டியபடி அலுவலகத்திற்குள் வருவதும், அங்கு வந்த பின்னர் கழற்றி வைப்பதும் உண்டு. அதனால் ஹெல்மெட் மாட்டியபடி வந்த 2 பேரும் வாடிக்கையாளர்களாக இருக்கலாம் என ஊழியர்கள் கருதி விட்டனர். 


சற்று நேரத்தில் மேலும் மூன்று பேர் அங்கு வந்தனர். அவர்கள் கையில் துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததால் வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் பதற்றம் அடைந்தனர். மர்ம நபர்கள், நிதி நிறுவனத்தின் வாயில் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டனர். உள்ளே இருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி இருக்கையில் அமர்த்தி, கைகளை பின்பக்கமாக கட்டிப்போட்டு, வாயில், பார்சல் கட்டப் பயன்படுத்தப்படும் டேப் போட்டு ஒட்டினர். 

hosur muthoot finance incident police investigation


அந்த கும்பல், ஊழியர்களைச் சரமாரியாக தாக்கினர். மேலாளரிடம் இருந்த லாக்கர் சாவிகளை எடுத்துச்சென்று, லாக்கர்களைத் திறந்தனர். அவற்றில் இருந்த 25 கிலோ நகைகள், கல்லா பெட்டியில் இருந்த 96 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பெரிய பெரிய பைகளில் அள்ளிப்போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர்.


கொள்ளையர்களில் இருவர் ஊழியர்களுக்கு காவலாக நின்று கொண்டனர். லாக்கரில் நகைகளை கொள்ளை அடிக்கும் வேலையில் ஒருவரும், மற்றொருவர் வாயில் கதவுக்கு வெளியிலும் நின்றிருந்தனர். கொள்ளையர்கள் திட்டமிட்டு, விரல் ரேகை அடையாளம் பதிந்து விடக்கூடாது என்பதற்காக கையுறைகளை அணிந்து வந்திருந்தனர். முகமூடியும் போட்டிருந்தனர். இக்காட்சிகள் அனைத்துமே முத்தூட் நிறுவனத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தன. 


கொள்ளை போன நகைகளின் இன்றைய மதிப்பு சுமார் 12 கோடி ரூபாய் இருக்கும் என்றார்கள் ஊழியர்கள். 

hosur muthoot finance incident police investigation


சினிமா பணியில் நடந்த இந்த பரபரப்பு கொள்ளை குறித்து தகவல் அறிந்த ஓசூர் ஹட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதர் ஆகியோரும் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணையை தீவிரப்படுத்தினர். கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.


கொள்ளையர்களிடம் இருந்த செல்போன் சிக்னல் டவரை வைத்து, அவர்கள் கர்நாடகா மாநிலத்தில் பதுங்கி இருக்கலாம் என முதலில் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் கர்நாடகாவில் ஆணேக்கல், சந்தாபுரம், கோலார் ஆகிய பகுதிகளில் சல்லடை போட்டு தேடினர். இரு மாநில எல்லையோர போலீசாரையும் உஷார்படுத்தினர்.


ஆனால் கர்நாடகாவில் அந்த கும்பல் இல்லை என்பதும், அவர்கள் போலீசாரின் கவனத்தை திசை திருப்பிவிட்டு தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்குச் சென்றிருப்பதும் தெரிய வந்தது. சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்பதால், அந்த கும்பல் லாரிகளில் சொந்த மாநிலத்திற்குச் தப்பிச்செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதியது போலீஸ். இதையடுத்து ஹைதராபாத் போலீசாரின் உதவியை நாடிய கிருஷ்ணகிரி போலீசார், வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்தும்படி கோரினர். 

hosur muthoot finance incident police investigation


ஹைதராபாத் ரிங் ரோடு பகுதியில் வாகனத் தணிக்கை நடந்தபோது, ஷேகிதாபாத் ரிங் ரோடு வழியாக ஒரு கண்டெய்னர் லாரி வந்தது. அதை மடக்கி சோதனை செய்தனர். ஓட்டுநரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொன்னார். ஆனால் குறிப்பிட்ட அந்த லாரியில்தான் கொள்ளை போன தங்கம் இருப்பதாக தமிழக போலீசாருக்கு உறுதியான தகவல் கிடைத்து இருந்ததால், லாரியை தீவிரமாக சோதனையிட கேட்டுக்கொண்டனர்.


தீவிர சோதனையில், லாரியில் ரகசிய அறை அமைத்து அதில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பெரிய பெரிய பைகளில் போட்டு வைத்திருப்பது தெரிய வந்தது. அந்த லாரியில் இருந்த 4 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்கள்தான் ஓசூரில் முத்தூட் பைனான்ஸ்சில் கொள்ளை அடித்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. 

hosur muthoot finance incident police investigation


இதையடுத்து உடனடியாக கொள்ளையர்கள் 4 பேர், லாரி ஓட்டுநர் ஆகிய 5 பேரையும் தெலங்கானா போலீசார்  கைது செய்தனர். அந்த லாரியை ஒரு கார் பின்தொடர்ந்து வந்தது. சந்தேகத்தின்பேரில் காரில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்களும் ஓசூர் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். ஓசூர் கொள்ளை சம்பவத்தில் இதுவரை மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

 

அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 25 கிலோ நகைகள், ரொக்கம் மற்றும் 7 கைத்துப்பாக்கிகள், 96 தோட்டாக்கள், கத்திகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். கொள்ளையர்கள் தப்பிச்செல்ல பயன்படுத்திய லாரி, கார், மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 


பிடிபட்டவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் ரூப்சிங் பகால், அமீத், சங்கர் சிங் பாகல், பவன் குமார், புபேந்தர் மஞ்சி, விவேக் மண்டல், டீக்ராம், ராஜிவ்குமார், லூயில் பாண்டே ஆகியோர் என்பது தெரிந்தது.

hosur muthoot finance incident police investigation

கொள்ளையர்கள் பிடிபட்டது எப்படி?:


எப்பேர்பட்ட கில்லாடி திருடனாக இருந்தாலும் ஏதாவது ஒரு தடயத்தை விட்டுவிட்டுப் போவான் என்பதுதான் காவல்துறைக்குச் சொல்லப்படும் பாலபாடம். இதை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட தமிழக காவல்துறையினர், முத்தூட் நிறுவன உயரதிகாரிகளிடம் விசாரித்தபோது முக்கிய தகவல் கிடைத்தது.


அதாவது, திருட்டு சம்பவங்கள் நடந்தால் காணாமல் போன நகைகள் எங்கே உள்ளன என்பதைக் கண்டுபிடிக்க அடமானமாகப் பெறப்பட்ட நகைகளை தனித்தனியாக பேக்கிங் செய்து முத்தூட் நிறுவனம் வைத்திருந்தது. சில பேக்கிங் கவரில், இருக்கும் இடத்தை காண்பிக்கக் கூடிய ஜிபிஎஸ் 'சிப்' பொருத்தப்பட்டு இருந்தது. இந்த ஜிபிஎஸ் 'சிப்'தான் கொள்ளையர்களுக்கு எமனாக மாறியது. 

hosur muthoot finance incident police investigation


அதேநேரம், கொள்ளையர்களும் தப்பித்துச் செல்லும்போது, புத்தசாலித்தனமாக நிதி நிறுவன ஊழியர்களிடம் செல்போன்களை பறித்துச் சென்றுள்ளனர். அந்த செல்போன் எண்களின் சிக்னலை எப்படியும் போலீசார் டிரேசிங் செய்வார்கள் என கருதிய அவர்கள், போலீசாரை திசை திருப்பும் நோக்கில் கர்நாடகா மாநிலத்திற்குச் சென்று, அங்கே செல்லும் வழியிலேயே அந்த செல்போன்களை தூக்கி வீசியெறிந்துவிட்டு, அங்கிருந்து லாரியில் தெலங்கானா வழியாக சொந்த மாநிலத்திற்குச் செல்ல முயன்றுள்ளனர். என்னதான் அவர்கள் புத்திசாலியாக இருந்தாலும், ஜிபிஎஸ் 'சிப்' மூலம் அவர்கள் போலீசாருக்கு தாங்கள் செல்லும் இடத்தை தங்களை அறியாமலேயே நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டே போகிறோம் என்பதை அவர்கள் கொஞ்சமும் அறிந்திருக்கவில்லை. 

hosur muthoot finance incident police investigation


விசாரணையில் அவர்கள் மத்தியபிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் நடந்த இடத்தில் 5 பேர் மட்டுமே இருந்துள்ளனர். ஆனால், லாரி ஓட்டுநர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதனால் மேலும் யார் யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது?; இந்த கும்பல் வேறு எந்தெந்த குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்? என்று கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக அவர்கள் விரைவில் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது. 


கொள்ளைச் சம்பவம் நடந்த 18 மணி நேரத்திற்குள் தமிழக போலீசார், தெலங்கானா போலீசார் உதவியுடன் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்து அசத்தியுள்ளனர். இதற்காக அவர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டி, வாழ்த்து தெரிவித்துள்ளார். 

hosur muthoot finance incident police investigation


முதல்வர் பாராட்டு:


இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ''தமிழ்நாடு காவல்துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் முத்தூட் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற கொள்ளையில் திருடு போன 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்கத்தையும் கொள்ளையர்களையும் துரிதமாக செயல்பட்டு, 18 மணி நேரத்தில் பிடித்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்று வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது