Skip to main content

“செந்தில் ஆண்டவனின் சன்னிதியில் ஹிந்தி மொழிக்கு இடம் இல்லை” - வைகோ கண்டனம்

Published on 30/04/2021 | Edited on 30/04/2021

 

Hindi language has no place in the near to Lord Senthil

 

‘தமிழ்க் கடவுள்’ என போற்றப்படும் முருகனுக்கு திருப்பரங்குன்றம், திருத்தணி, திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை, பழனி, சுவாமிமலை ஆகியவை ஆறுபடை வீடுகள் ஆகும். இவற்றில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் ஹிந்தி மொழியில் கல்வெட்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தக் கல்வெட்டு வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

 

அதில் கூறியதாவது, “அறுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூரில், தமிழ் கடவுள் முருகனின் ஆலயத்தில், திடீரென இந்தி கல்வெட்டுகள் முளைத்துள்ளதாக இன்று ஏடுகளில் வந்துள்ள செய்தியால், உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் கொதித்துப்போயிருக்கிறார்கள். கொதிநிலையை அறிவதற்கு, குரங்கு தன் குட்டியின் கையை எடுத்துச் சுடும் நீரில் வைத்துப் பார்ப்பது போல, ஆதிக்க உணர்ச்சிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று பார்க்க, இந்தக் கல்வெட்டு மோ(ச)டி வித்தையை, அரங்கேற்றி உள்ளனர்.

 

Hindi language has no place in the near to Lord Senthil

 

இதை யார் வைத்தார்கள், எப்போது வைத்தார்கள், என்ன நோக்கத்திற்காக வைத்தார்கள்? இந்தி ஆதிக்க சக்திகள் நடத்தும் கொல்லைப்புற ஏற்பாடுகளுக்கு, எந்தவிதத்திலும் தமிழ்நாட்டு அரசு இம்மி அளவும் இடம்தரக் கூடாது. திருச்செந்தூருக்கும் வட ஆரியத்திற்கும் எந்தக் காலத்திலும் எந்தத் தொடர்பும் இல்லை. இத்தகைய கல்வெட்டுகளுக்கு இடம் அளித்து, எதிர்காலத்தில் வரலாற்றைத் திரித்துக் கூறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திவிடக் கூடாது. தமிழ்நாட்டில், 1938இல் தொடங்கிய மொழிப்போர்க் கனல், நீறுபூத்த நெருப்பாக இருக்கின்றது. தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், மூதறிஞர் இராஜாஜியும், தலைவர் கலைஞரும் போர்க்கொடி ஏந்திய உணர்வு கொஞ்சமும் மங்கிவிடாமல், மானம் உள்ள தமிழ் மக்கள் இன்றைக்கும் போர்க்களம் புகுவதற்கு துடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

அதற்கு முன்பாக, ஆட்சியாளர்கள், அந்தக் கல்வெட்டுகளை உடனே அகற்ற வேண்டும். திருச்சீர் அலைவாய் என்று போற்றப்படும் செந்தில் ஆண்டவனின் சன்னிதியில், இந்திக்கு இடம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். வேல் ஏந்தி, சூரனை வதைத்து, கோவில் கொண்டிருக்கிற செந்தூர் ஆண்டவன் கோவிலுக்கு, மக்கள் கால்நடையாகவே வந்து வணங்கி வழிபட்டு, தமிழர் பண்பாட்டையும், மரபையும் பேணிக் காத்த மண்ணில், இந்தியைத் திணிக்க முயல்வதை நொடிப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

 

தமிழ்நாட்டில், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள்தான் ஆட்சி மொழிகள் என பேரறிஞர் அண்ணா, 1967 ஆம் ஆண்டு சட்டம் இயற்றினார்கள். அதை இனி யாராலும் மாற்ற முடியாது என்றும் உறுதிபட அறிவித்தார்கள். அந்தச் சட்டம்தான் இப்போதும் நடைமுறையில் இருக்கின்றது. அதன்படி, அந்தக் கல்வெட்டுக்கு அங்கே இடம் கிடையாது. எனவே, அவற்றை அகற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை, உடனடியாக அகற்றுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இஸ்ரேலின் செயல் ஏற்க முடியாதது” - ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் பிரதமர்கள் கண்டனம்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

 Spanish and Belgium Prime Ministers condemned says Israel's action is unacceptable

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

 

இதனையடுத்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் நேற்று (24-11-23) முதல் அமலுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் 4 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், எகிப்தின் ரபா எல்லை பகுதியில் இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 13 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாது என ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் பிரதமர்கள் கூட்டாக சேர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 

எகிப்தின் ரபா எல்லை பகுதியில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ ஆகியோர் கூட்டாக சேர்ந்து நேற்று (24-11-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பேசியதாவது, “சர்வதேச சமூகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என அனைவரும் பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான நேரம் வந்துள்ளது. ஐரோப்பியா அது போன்று இணையவில்லை என்றால், ஸ்பெயின் தனது சொந்த முடிவை எடுக்கும்” என்று கூறினார்.

 

அதனை தொடர்ந்து, பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ பேசியதாவது, “பிணைய கைதிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே முன்னுரிமையாக இருக்க வேண்டும். அதன்படி, உதவி பொருட்கள் காசாவுக்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் கொல்லப்படுவது உடனே நிறுத்தப்பட வேண்டும். இதில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். காசாவை அழிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு சமூகம் அழிக்கப்படுகிறது என்பதனையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்பாவி மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் செயல் ஏற்க முடியாதது. அதனால், நிரந்தர போர் நிறுத்தம் வேண்டும்” என்று கூறினார்.  

 

 

Next Story

“உண்மை அம்பலமாகிவிட்டதால் அண்ணாமலை அலறுகிறார்” - ஆர்.எஸ் பாரதி காட்டம்

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

dmk rs bharathi talk about bjp annamalai

 

“இந்தி மட்டும்தான் தேசிய மொழி, ஆட்சிமொழி. அதைப் படித்தால் மட்டும் தான் வேலை என்கிற பா.ஜ.க.வின் மொழித்திணிப்பை அம்பலப்படுத்தி, இந்தியையே தாய்மொழியாகக் கொண்டவர்கள்கூட நமது தமிழ்நாட்டுக்குத்தான் வேலை தேடி வருகிறார்கள் என்பதுதான் தி.மு.க.வினரின் பரப்புரையே தவிர, எந்த ஒரு மொழி பேசுபவருக்கும் எதிரான பிரசாரம் அல்ல” என திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைதிப் பூங்கா எனப் பெயர் பெற்ற தமிழ்நாடு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் தொழில் முதலீடுகளிலும் முன்னணி மாநிலமாகத் திகழ்வதை, வெறுப்பரசியல் நடத்தும் பா.ஜ.க. நிர்வாகிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நாள்தோறும் வதந்திகளைப் பரப்பி, தமிழ்நாட்டை வன்முறைக் காடாக மாற்றலாம் என மனப்பால் குடித்து வருகிறார்கள். கழகத் தலைவர், முதல்-அமைச்சரின் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று, "இந்தியாவுக்கு நம் கழகத்தலைவர் அவர்கள் தான் வழிகாட்ட வேண்டும்" என்றும், "இந்தியாவை வழிநடத்தும் தலைமைத் தகுதி நம் கழகத் தலைவருக்கு இருக்கிறது" என்றும் உளமாரப் பாராட்டியதால் பா.ஜ.க.வினருக்கு அங்கமெல்லாம் எரியத் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டின் முதல்-அமைச்சருடைய பெருமைமிகு சிறந்த நிர்வாகத்திற்குக் களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே, தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, திட்டமிட்டுத் திரிக்கப்பட்ட வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பினர். அதன் மூலம் பதற்றத்தை உருவாக்கலாம் என்பதே அவர்களின் வஞ்சகத் திட்டம். பா.ஜ.க. பரப்பியதெல்லாம் வதந்திதான் என்பது தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களிடமும் அம்பலமாகிவிட்டதால் அலறல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை.

 

அதில் வழக்கம் போல திசைதிருப்பும் வேலையைக் காட்டியிருக்கிறார், பொய்யையே முதலீடாகக் கொண்டு அரசியல் நடத்தி வரும் அண்ணாமலை. திராவிட முன்னேற்றக் கழகம் இந்திக்கு எதிராக வெறுப்புப் பிரசாரம் செய்வதன் விளைவால்தான் வதந்திகூட உண்மைபோன்ற அச்சத்தை உருவாக்கிவிட்டது என்று மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட அண்ணாமலை நினைக்கிறார். தி.மு.க. எந்த மொழிக்கும் எதிரான இயக்கமல்ல. எங்கள் அன்னைத் தமிழ்நாட்டவர் மீது ஆதிக்க இந்தியைத் திணிக்காதே என்று எந்நாளும் உரிமைக்குரல் கொடுக்கின்ற இயக்கம்தான் தி.மு.க. அதற்காகத் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டு அன்னைத் தமிழுக்கு உயிர்க்கொடை ஈந்த தியாக மறவர்களைக் கொண்ட இயக்கம்.

 

இந்தித் திணிப்புக்கு எதிரான தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு என்பது இந்தி பேசும் மக்கள் மீதான வெறுப்பாக ஒருபோதும் இருந்ததே இல்லை. இந்தி மட்டும்தான் தேசிய மொழி, ஆட்சிமொழி, அதைப் படித்தால் மட்டும் தான் வேலை என்கிற பா.ஜ.க.வின் மொழித் திணிப்பை அம்பலப்படுத்தி, இந்தியையே தாய்மொழியாகக் கொண்டவர்கள்கூட நமது தமிழ்நாட்டுக்குத்தான் வேலை தேடி வருகிறார்கள் என்பதுதான் தி.மு.க.வினரின் பரப்புரையே தவிர, எந்த ஒரு மொழி பேசுபவருக்கும் எதிரான பிரசாரம் அல்ல. சாதிப்பிரிவினை அரசியலால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் மீதான வன்முறைத் தாக்குதல்கள், சிறுபான்மை மக்களைப் பார்த்து 'பாகிஸ்தானுக்குப் போ" என பா.ஜ.க. நிர்வாகிகள் வெறுப்புணர்வுப் பிரசாரம், அவர்கள் மீது கொடூரத் தாக்குதல்கள் எனத் தொடர்ச்சியான வன்முறை-வெறுப்பரசியலை நடத்தி, இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக இருப்பவர்கள் தேசபக்தி வேடம் போடும் அண்ணாமலையின் கட்சியினர்தான்.

 

வெறுப்பையும் பகையையும் கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க.வின் மாநிலத் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அண்ணாமலை, "வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?" என்று கேட்பது வெட்கக் கேடு. ஆனால், பீகார் மாநில அரசின் சார்பில் வந்த குழுவினர், தமிழ்நாட்டில் எவ்வித அச்சமான சூழலும் இல்லை என்பதையும், வட மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்து, உண்மை நிலையைத் தெளிவான அறிக்கையாக அளித்துள்ளனர்.

 

உண்மைக்கு மாறாக, வதந்தியைத் தொடர்ந்து பரப்பும் உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளை நோக்கி கேள்வி கேட்க வேண்டிய அண்ணாமலை, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் நோக்கி அறிக்கை அம்பு விடுவது என்பது அரசியல் உள்நோக்கமின்றி வேறில்லை. வடமாநிலத் தொழிலாளர்கள் நலன் காப்பதில் தமிழ்நாடு அரசுக்குத் துணை நிற்போம் எனத் தெரிவித்த அண்ணாமலை, அந்த அறிக்கையில் உள்ள மையின் ஈரம் காய்வதற்குள், வன்ம அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பது அவரது இரட்டை வேடத்தைத்தான் தோலுரித்துக் காட்டி உள்ளது. அண்ணாமலையைப் போன்றவர்கள் எத்தனை வேடம் போட்டு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். வதந்தி பரப்பி வன்முறைச் சூழலை உருவாக்க நினைத்தால் சட்ட ரீதியான நடவடிக்கையைச் சந்திக்க வேண்டியிருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.