
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைபெறும் பயனாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் கட்டணம் நிர்ணயித்த உத்தரவை எதிர்த்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை பெறும் பயனாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் கட்டண உச்சவரம்பு நிர்ணயித்து, தமிழக சுகாதாரத் துறை சார்பில் கடந்த ஜூன் 5-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இத்தொகை மிகக் குறைவாக இருப்பதாகக் கூறி, இந்திய தனியார் மருத்துவமனைகள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு இணைச் செயலாளர் அடெல் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ‘கடந்த ஜூன் 5-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோருக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது உண்மையான செலவுகளின் அடிப்படையில் கணக்கிட்டு நிர்ணயிக்கப்படவில்லை. மருத்துவமனைகளுடன் கலந்தாலோசித்து நிர்ணயிக்கப்படவில்லை. கரோனா சிகிச்சையைப் பொறுத்தவரை, ஐந்து பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு பரிசோதனைக் கருவியின் விலை 3 ஆயிரம் ருபாய் வரை ஆகிறது. மருத்துவமனை அறைகளின் வாடகை ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை உள்ளது. நூறு படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளுக்கு, 200 முழு உடல் கவசங்கள் தேவைப்படும். அவற்றின் விலை 750 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை உள்ளது. 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை மருந்துகளின் விலை உள்ளது.
தன்னிச்சையாகப் பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கான கட்டணங்களை, முறையாகக் கணக்கிட்டு நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும். 2017-ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், உண்மையான செலவுகளின் அடிப்படையில், கட்டணங்கள் நிர்ணயிக்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.’ எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ஜனவரி 11-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)