
சட்டப் படிப்புக்கான அரியர் தேர்வு கால அட்டவணை குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக, அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் அமர்வு, தேர்வு எழுதாமல் ஆல் பாஸ் செய்யக்கூடாது என்றும், ஆன்லைனிலோ, ஆப்-லைனிலோ தேர்வு நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், சட்டப் படிப்பிற்கான அரியர் தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சஞ்சய் காந்தி என்ற சட்டக் கல்லூரி மாணவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அகில இந்திய பார் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரியர் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று வாதிட்டார். அப்போது நீதிபதி அரியர் தேர்வு எப்போது நடத்தப்படும் என்று கேள்வி எழுப்பினார்.
சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண், சட்டப் படிப்புகளுக்கான அரியர் தேர்வு நடத்துவது தொடர்பான கால அட்டவணை குறித்து, சிண்டிகேட் குழுவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதி வருகிற 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)