court

கொடைக்கானல் பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜுலு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் ," நான் சுதந்திர போராட்ட தியாகி. 15 வயதில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றேன். இதனால் ஆங்கிலேயே அரசால் கைது செய்யப்பட்டு 3.11.1942 முதல் 5.9.1943 வரை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டேன்.

Advertisment

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மாநில அரசு வழங்கும் ஓய்வூதியம் கேட்டு 2013-ல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுத்துறை இணை செயலரிடம் மனு அளித்தேன்.

Advertisment

நான் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறைக்கு சென்றதற்கு தியாகிகள் மாயாண்டிபாரதி, பெரியசாமி ஆகியோர் சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த சான்றிதழையும் ஓய்வூதிய விண்ணப்பத்துடன் அனுப்பியிருந்தேன்.

ஆனால் எனது விண்ணப்பத்தை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை. ஓய்வூதியத்துக்காக தொடர்ந்து மனு அளித்தும் பலனில்லை. எனவே ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

Advertisment

இந்த மனு முன்னர் நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த நவம்பர் 21ல் மனுதாரருக்கு 2 வாரத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறையின் இணைச்செயலர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்துள்ளார்.

அந்த மேல்முறையீடில் ," தியாகிகள் ஓய்வூதியம் பெறுவதற்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. மனுதாரர் இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை. பிறந்த தேதி தொடர்பாக அளித்த சான்றிதழ் ஏற்கும்படி இல்லை. உள்ளூர் மருத்துவரிடம் சான்று பெற்றுள்ளார். இது செல்லத்தக்கது அல்ல. அதன்படி பிறந்த தேதியை உறுதி படுத்த வேண்டுமென்ற நிபந்தனையையும் பூர்த்தி செய்ய மனுதாரர் தவறிவிட்டார். இந்த குறைபாடுகளை தனிநீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை. 20 ஆண்டுகள் தாமதத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தனிநீதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். இது ஏற்கத்தக்கதல்ல. தியாகிகள் பென்சனை பெறுவதற்கான முக்கிய நிபந்தனைகளை இவர் பூர்த்தி செய்யாத காரணத்தால், தியாகிகள் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்ட தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அனைத்து ஆவணங்களுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முன்பாக பிப்ரவரி22ல் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.

அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை மார்ச் 21ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

- சி.ஜீவா பாரதி