High Court order in the case against District Collector

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் உள்ள அத்தனாவூரைச் சேர்ந்த குமரேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "ஏலகிரியில் உள்ள அத்தனாவூர் கிராமத்தில் எனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை அபகரிக்கும் நோக்கில், எனக்கான தனி பட்டாவில், கோவிந்தராஜ் என்பவரின் பெயரை சேர்த்து திருப்பத்தூர் வட்டாட்சியராக பணிபுரிந்த சிவப்பிரகாசம் உத்தரவிட்டிருந்தார். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ரூ. 20 லட்சத்தை லஞ்சமாக தரவேண்டும் எனக்கேட்டார்.

Advertisment

இந்த பிரச்சனை தொடர்பாக வட்டாட்சியர் சிவப்பிரகாசத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வட்டாட்சியர் மீதான புகாரை 12 வாரங்களில் விசாரித்து முடிவெடுக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் அந்த புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Advertisment

தனது புகாரை திரும்பப் பெறுமாறு கூலிப்படையினரை வைத்து தற்போது வாணியம்பாடியில் வட்டாட்சியராக பணிபுரியும் சிவப்பிரகாசம் மிரட்டி வருகிறார். இது தொடர்பாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அந்த வட்டாட்சியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகாரை முறையாக விசாரிக்க காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும்” என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சவுந்தர், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் சிவப்பிரகாசத்துக்கு எதிரான புகார் மீது 3 வாரங்களில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜோலார்பேட்டை காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisment