கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘குறிகாரன் வலசை, கீழ்பாகம் மற்றும் அதனை சுற்றிய பஞ்சாயத்துகளில் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில், போலி நபர்களை இணைத்து அவர்களுக்கு ஊதியம் வழங்குவது போல் பணித்தள பொறுப்பாளர் அமுதா என்பவர், பண மோசடி செய்கிறார். அவர் செய்த அந்த மோசடிக்கு, பஞ்சாயத்து துணைத்தலைவரான அமுதாவின் கணவர் உதவி செய்கிறார். பணித்தள பொறுப்பாளர் அமுதா, இதுவரை ரூ.5 கோடி வரை முறைகேடு செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான மனு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘100 நாள் வேலை திட்டத்தை ஊராட்சி தலைவர்கள் கொள்ளையடிக்கும் திட்டமாக பயன்படுத்துகின்றனர். இந்த புகார் குறித்து மத்திய ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநரகம், ஊரக வளர்ச்சித்துறை செயலர், கரூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.