High Court Judge Anand Venkatesh change!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வந்தவர் ஆனந்த் வெங்கடேஷ். இவர், கடந்த கால ஆட்சியின் போது அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் வழக்குகளைத் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார். அந்த வகையில் அமைச்சர்களான பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன், ஐ. பெரியசாமி ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட வழக்குகளைத் தாமாக முன்வந்து மீண்டும் விசாரித்து வருகிறார். அதேபோல், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். ஆகியோரின் வழக்குகளையும் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisment

சமீபத்தில், அமைச்சர் ஐ. பெரியசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி ஆகியோரின் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “கீழமை நீதிமன்றங்களின் செயல்களைப் பார்க்கும் போது நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் என்னை வில்லனாகப் பார்க்கின்றனர். ஒவ்வொரு வழக்கிலும் விசாரணையை யாரும் எதிர்கொள்ள விரும்பவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அக். 3ம் தேதி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதியாக செயல்படுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இவர் விசாரித்து வந்த வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்படுவது வழக்கம் அந்த அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.