High Court decision on Ram foot Inaugural Event

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி திறப்பு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், திருப்பூரில் இருந்து அயோத்திக்கு ராமர் பாதம் கொண்டு செல்லும் தொடக்க விழாவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் அகில பாரத இந்து மகா சபா தலைவராக பாலகிருஷ்ணன் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

அந்த மனுவில், ‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதைக் கொண்டாடும் வகையில், திருப்பூரில் உள்ள திருக்கோவிலில் ராமர் பாதத்தை வைத்து பூஜை செய்ய ஏற்பாடு செய்யபட்டிருக்கிறது. அந்த பாதத்தை வாகனத்தில் வைத்து ராமேஸ்வரம் வரை ஊர்வலமாக எடுத்து கோவிலில் பூஜை செய்த பின்பு, அங்கிருந்து அயோத்திக்கு ரயில் மூலமாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க நிகழ்வில், இந்து மகா சபை மாநில நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். ஆனால், தொடக்க விழாவுக்கும், வாகன ஊர்வலத்துக்கும் போலீஸ் அனுமதி மறுக்கிறது. எனவே, தொடக்க விழாவுக்கும், வாகன ஊர்வலத்துக்கும் அனுமதி அளித்து உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பான வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், ‘மனுதாரர் ஏற்கெனவே இந்து முன்னணி அமைப்பில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்டவர். மேலும், இவர் மீது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதியின்றி விநாயகர் சிலைகளை வைத்தது தொடர்பான புகார்கள் உள்ளது. மனுதாரர் தனிப்பட்ட முறையில் கோவிலுக்குச் செல்வதையோ, தரிசனம் செய்வதையோ யாரும் தடை செய்யவில்லை. ஆனால், சம்பந்தப்பட்ட கோவிலின் அனுமதியும் வாங்காமலும், நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி வாங்காமலும் கோரிக்கை வைக்கிறார். எனவே, இந்த நிகழ்வு முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கத்துடன் ஏற்பாடு செய்துள்ளதால் அனுமதி அளிக்கப்படக் கூடாது’ என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ‘தனிப்பட்ட முறையில் கோவிலுக்குச் சென்று பாதங்களை வைத்து தரிசிக்க எந்த அனுமதியும் தேவையில்லை. ஆனால், இது போன்ற ஊர்வலம், தொடக்க நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்க முடியாது’ எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Advertisment