Skip to main content

இதுவரை மற்ற ஸ்கூட்டர் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தாத விஷயத்தை அறிமுகப்படுத்திய ஹீரோ மோட்டார்ஸ்

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் இருசக்கர நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் பிரிவுகளில் ஒன்று. அதன் வழியில் அந்நிறுவனத்தின் புதிய மாடலான Maestro Edge 125-ஐ விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக இந்தியாவின் முதல் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் (Fuel injection) ஸ்கூட்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

mastro

 

டிரம் பிரேக், டிஸ்க் பிரேக், ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பங்களுடன் 3 மாடல்களில் இந்த வாகனம் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதன் விலை ரூ.58,500 இருந்து தொடங்குவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



டிரம் பிரேக் கொண்ட வாகனத்தின் விலை  ரூ.58,500, டிஸ்க் பிரேக் கொண்ட வாகனத்தின் விலை ரூ.60,000 மற்றும் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் கொண்ட வாகனத்தின் விலை ரூ.62,700 என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

Destini 125 ஸ்கூட்டரில் உள்ளது போலவே புதிய Maestro Edge 125யிலும் 125சிசி ஏர்-கூல்டு இஞ்சின் இடம்பெற்று இருக்கிறது. மேலும் இது கார்பரேட்டட் மற்றும் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் என இரண்டு இஞ்சின்களிலும் கிடைப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹீரோ பட கதை திருட்டு விவகாரம் குறித்து இயக்குனர் பாக்யராஜ் எழுதிய கடிதம்!

Published on 24/12/2019 | Edited on 24/12/2019

இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இரண்டாவதாக சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ படத்தை இயக்கினார். இந்த படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியானது. ஹீரோ டீஸர் வெளியான பின்பு, இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக இருப்பவர் போஸ்கோ பிரபு. இவர் என் கதையைத் திருடி இயக்குனர் மித்ரன்  ‘ஹீரோ’ படத்தை எடுத்துவிட்டார் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

sivakarthikeyan

 

 

இந்நிலையில் இதுகுறித்து கடந்த 16ஆம் தேதி போஸ்கோ பிரபுவுக்கு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் எழுதிய கடிதத்தில் கதை திருட்டு நடந்திருப்பது உண்மைதான் என்று குறிப்பிட்டுள்ளார். அதில், “இயக்குனர் மித்ரன் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ஹீரோ' படத்தின் டீஸர் மற்றும் விளம்பரங்களைப் பார்த்தேன். அந்தப் படத்தின் கதை, நம் எழுத்தாளர் சங்கத்தில் நான் 26.04.2017 அன்று பதிவு செய்து வைத்துள்ள அதே கதைதான். எனவே, என் கதைக்கு உண்டான நியாயம் வழங்க வேண்டும்'' என்று கோரி 29.10.2019 தேதியில் ஒரு புகாரை நமது சங்கத்தில் தந்தீர்கள்.

அதன்படி, நான் கதைச் சுருக்கத்தை மட்டும் தங்களிடம் கேட்டு வாங்கிக்கொண்டு, டைரக்டர் மித்ரனிடம் 'ஹீரோ' படத்தின் கதைச் சுருக்கத்தையும் எழுதித் தரச் சொல்லி, அதை வாங்கி ஒப்பிட்டுப் பார்த்தோம். இந்த ஒப்பீட்டுப் பணியை நான் மட்டுமின்றி, நமது சங்கத்தின் முக்கிய செயற்குழு உறுப்பினர்கள் 18 பேரிடமும் தரப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.

அந்த 18 உறுப்பினர்களும் பல படங்கள் இயக்கிய, பல படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதிய திறமைமிக்க அனுபவசாலிகள். அவர்கள் அனைவரும் படித்தபின், தங்கள் கதையும், டைரக்டர் மித்ரனின் ஹீரோ கதையும் ஒன்றுதான் என எல்லோரும் கருத்து வேறுபாடின்றி ஒரே முடிவாகக் கூறினார்கள். எனது கருத்தும் அதே என்பதால் மித்ரனை நான் எனது அலுவலகத்துக்கு வரவழைத்தேன்.

'ஆரம்பத்தில் ஃப்ராடு வேலைகள் செய்யும் ஹீரோ- ஆராய்ச்சியில் தங்கை- அவளது கண்டுபிடிப்பு- கண்டுபிடிப்பை காப்புரிமை பெற்றுத் தருவதாகக் கூறிய வில்லன் பின் மோசடி செய்வது- தங்கை மேல் பழிசுமத்தி அதனால் கைது- பின் விடுதலை- ட்ரெயினில் விரக்தியுடன் திரும்புதல்- பின் தற்கொலை- பொங்கியெழும் ஹீரோ- போராடி வில்லன் செய்த மோசடியை அம்பலப்படுத்தி தங்கையின் பெயரை நிலைநாட்டுதல்' என்பதே கதைச் சுருக்கமாக இருந்தது.
 

 

கதை, திரைக்கதைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதில், உச்ச நீதிமன்றம் வகுத்த வழிகாட்டுதலின்படி, இரண்டு கதைகளிலும் ஆரம்பம் முதல் கடைசி வரை இவ்வளவு ஒற்றுமைகள் இருப்பதாய் மொத்த உறுப்பினர்களும் கருதுகிறார்கள் என்ற விவரத்தை இயக்குநர் மித்ரனிடம் கூறினேன். ஆனால், அவர் என் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒப்பிட்டுப் பார்த்த 18 செயற்குழு உறுப்பினர்களிடம் விவாதித்து, அவர்களின் விளக்கத்தைக் கூற வேண்டும் என்று கேட்டார்.

அதன்படியே ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் இயக்குநர் மித்ரனின் கருத்தை யாரும் ஏற்க மறுத்து இரண்டு கதையும் ஒன்றுதான் என ஆணித்தரமாகக் கருத்து கூறினர். அதன்பின் அனைவரும் என்னிடம் 'ஹீரோ' படத்தில் போஸ்கோ பிரபுவான தங்களுக்குக் கதைக்கான பெயரும், இழப்பீட்டுத் தொகையும் பெற்றுத்தர வலியுறுத்தினார்கள்.

'சர்கார்', 'கோமாளி' படங்களுக்கு இதே பிரச்சினை வந்தபோது என்ன நியாயம் வழங்கப்பட்டதோ, அதையே இதிலும் தீர்ப்பாக வழங்க முடிவெடுத்து இயக்குனர் மித்ரனுக்கு 22.11.2019-ல் ஒரு கடிதம் எழுதினேன். ஆனால், 20 நாட்களுக்கு மேலாகியும் இயக்குனர் மித்ரன் பொறுப்பான பதில் அளிக்காமல் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளை முடித்ததோடு, நீதிமன்றத்தின் மூலம் தாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதிருக்க உங்கள் மீது கேவியட் எடுத்து, எங்களுக்கு அதன் பிரதியை அனுப்பியிருந்தார்.

சங்கத்தை மதிக்காமல் மித்ரன் எடுத்த இந்த நடவடிக்கை சங்கத்துப் பொறுப்பாளர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. இதனை சங்கத்துக்கான பெரிய அவமதிப்பாக நினைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதற்குள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால் நீங்கள் நீதிமன்றத்தை அணுகி, உங்கள் பக்கமுள்ள நியாயத்தைக் கோரி நீதிக்குப் போராட விரும்புவதாக தெரிவித்தீர்கள்.

நமது சங்கத்தின் 18 பேருக்கும் மேற்பட்டோர் இரண்டு கதையும் ஒன்றே என்பதை உறுதிபடக் கூறியதை தலைவரான என் மூலம் தங்களுக்கு சாட்சிக் கடிதமாக இதைத் தருகிறோம். உங்களுக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்க வாழ்த்து கூறுகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

’சூப்பர் ஹீரோ' சிவகார்த்திகேயன் வென்றாரா? ஹீரோ - விமர்சனம் 

Published on 20/12/2019 | Edited on 20/12/2019

தமிழ் திரையுலகில் காலந்தோறும் சீர்திருத்தங்களை வலியுறுத்தும் படங்கள் வெளிவருவது வழக்கமே. சமூக சீர்திருத்தம், அரசியல் சீர்திருத்தம், பிறகு கல்வி, விவசாயம் என பல்வேறு தளங்களில் நிகழ வேண்டிய சீர்திருத்தங்களை வலியுறுத்தி பல்வேறு படங்கள் வந்துள்ளன. சமீபமாக, விவசாயம், கல்வி, பெண்ணுரிமை ஆகியவற்றை சார்ந்த சீர்திருத்த படங்கள் அதிகமாக வருகின்றன. 'இரும்புத்திரை'யில் இணைய குற்றங்கள் குறித்து மிக சுவாரஸ்யமாக கதையமைத்து கவனமீர்த்த மித்ரன், தனது 'ஹீரோ' சிவகார்த்திகேயன் மூலம் இந்திய கல்வி முறையில் நிகழ வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்துப் பேசியிருக்கிறார். கருத்தாகவும் சினிமாவாகவும் எப்படியிருக்கிறது 'ஹீரோ'?

 

sivakarthikeyan



சின்ன வயசுல ஒரு ஸ்டூடண்ட் கிட்ட, 'நீ என்னவாகப் போற?'ன்னு கேட்டா 'டாக்டர் ஆகி உயிரை காப்பாத்துவேன், போலீஸாகி ஊர காப்பாத்துவேன், மிலிட்டரில போயி நாட்டை காப்பாத்துவேன்'னு சூப்பர் ஹீரோ மாதிரி பேசுவாங்க. ஆனா, படிச்சு முடிச்சதும் அதெல்லாம் மறந்துருவாங்க. அதுக்குக் காரணம் நம்ம கல்வி முறைதான்... - 'ஹீரோ' படத்தின் இரண்டு ஹீரோக்களாலும் இரண்டு முறை சொல்லப்படும் இந்த வசனம்தான் படத்தின் மையக்கருத்து. அந்தக் கல்விமுறையில் என்ன மாற்றங்கள் வரவேண்டும், எதன் அடிப்படையில் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், கல்வி வியாபாரம் தடுக்கப்பட வேண்டும்  என்பதையெல்லாம் மிக விரிவாகவே பேசியிருக்கிறது 'ஹீரோ'. விரிவு சரி, ஆழம் இருக்கிறதா? 'சக்திமான்' ரசிகரான சிவகார்த்திகேயனுக்கு சிறு வயதிலேயே சூப்பர் ஹீரோ ஆகவேண்டுமென்பது ஆசை. நன்றாகப் படிக்கும் மாணவரான அவர், சந்தர்ப்ப சூழ்நிலையால் போலி சான்றிதழ் தயாரித்து விற்கும் வேலை செய்கிறார். கல்லூரிகளில் கமிஷன் வாங்கிக்கொண்டு மாணவர்களை சேர்த்துவிடும் வேலையும் செய்கிறார். இன்னொரு புறம், 'ஃபெயிலியர்கள்' என்று ஒதுக்கப்படும் மாணவர்களை சேர்த்து அவர்களுக்குப் பிடித்த, ஆர்வமுள்ள பாடத்தை, விஞ்ஞானத்தை கற்றுத்தந்து அவர்களை புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தச் செய்கிறார் அர்ஜுன். சிவகார்த்திகேயன், அர்ஜுனிடம் வந்து சேர்ந்தது எப்படி, சாதாரண மனிதன் சூப்பர் ஹீரோவானது எதற்கு, அதனால் சாதித்தது என்ன என்பதுதான் 'ஹீரோ'.

 

arjun



நமது கல்விமுறையின் குறைபாடுகள், தேர்வுகளை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு புறக்கணிக்கப்படும் திறமைமிகு மாணவர்களின் அவலநிலை, இவ்வளவு அறிவுவளம் இருந்தும் அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழாத காரணம் என தன்  இரண்டாவது படத்தின் களத்தையும் கதையையும் சமூகம் சார்ந்து சிந்தித்த மித்ரனுக்கு வாழ்த்துகள். அந்த சிந்தனை ஒரு திரைப்படமாக, சுவாரசியமாக ரசிக்கத்தக்கதாக இருக்கிறதா? ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் நாயகன் அந்த சூப்பர் ஹீரோ நிலையை அடைவதற்கான தேவை, காரணம், சாத்தியம் ஆகியவை முக்கியம். அந்த வகையில் முதல் பாதி முழுவதையும் ஹீரோ உருவாவதை விளக்க எடுத்துக்கொண்ட படம், தேவையில்லாத காதல், காமெடி காட்சிகளில் உழல்கிறது. படத்தில் பேசப்படும் பிரச்சனையான கல்வி வியாபாரம், உயர்கல்வி வாய்ப்பு ஆகியவற்றில் இயக்குனரின் (அ) படத்தின் நிலைப்பாடு என்ன என்ற குழப்பம் முதல் பாதியில் நமக்கு நேர்கிறது. சில இடங்களில் 'மருத்துவ, பொறியியல் படிப்புகளில் சேர தேவையான மதிப்பெண்கள் இல்லாததால் பணம் கட்டிப் படிக்கும் பணக்கார மாணவர்கள் பாவம், அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்' என்று மெசேஜ் சொல்ல வருகிறார்களோ என்ற பயம் வருமளவுக்கு காட்சிகள், வசனங்கள் இருக்கின்றன. பின்னர், மெல்லத் தெளிவாகும் திரைக்கதை, நாயகன் சூப்பர் ஹீரோவாகி தொடர்கிறது. சூப்பர் ஹீரோ சிவகார்த்திகேயன் புரியும் ஒரு சண்டைக் காட்சி சிறப்பு. மற்றபடி, சூப்பர் ஹீரோவாகி என்ன என்ன சாதிக்கவேண்டும் என்பதிலும் தெளிவில்லாதது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது படம்.

 

abhay deol



ஹீரோ ஒருபுறம் என்றால், வில்லனாக நடித்திருக்கும் அபய் தியோல், ஒரு மிகப்பெரிய கல்வி நிறுவன அதிபராக வருகிறார். எங்கு புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தாலும் அங்கு அவர் இருக்கிறார், அழிக்கிறார். இதற்கான தேவை என்ன? ஒரு கல்வி நிறுவன அதிபருக்கு இந்த நோக்கம் ஏன், இதனால் வரும் லாபம் என்ன என்று நூறு கேள்விகள் தோன்றுகின்றன. ஒரு கட்டத்தில் இந்த  வில்லனுக்கு வேறு வேலையில்லையா என்று தோன்றுகிறது நமக்கு. இப்படி, நிஜத்திலிருந்து பல வகைகளில் வேறுபடும் திரைக்கதை படத்திலிருந்து நம்மை பிரித்தே வைக்கிறது. 'இதுக்கு ஜென்டில்மேன் போதாது, ஹீரோ வேணும்' என ஆங்காங்கே அர்ஜுனுக்கேற்ற ஜென்டில்மேன் ரெஃபரன்ஸ் சேர்க்கப்பட்டிருப்பது பிற குறைகளால் சரியாகப் பொருந்தவில்லை.

 

super hero



தொழில்நுட்ப கோணத்தில் படம் மிக நேர்த்தியாக இருக்கிறது. ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவும் ரூபனின் படத்தொகுப்பும் உயர்தரம். இதற்கு இணையாக யுவனின் பின்னணி இசையும் சேர்ந்து 'சூப்பர் ஹீரோ' காட்சிகளை மெருகேற்றியுள்ளது. பாடல்கள், எந்த விதத்திலும் ஈர்க்காமல் கடந்து செல்கின்றன. பின்னணி இசையில் கவனம் செலுத்திய யுவன் பாடல்களை கைவிட்டுவிட்டார் போல. சிவகார்த்திகேயன், 'கலகல' இளைஞனாகவும் கலக்கும் சூப்பர் ஹீரோவாகவும் தனது பங்கை முழுமையாக வழங்கியிருக்கிறார். கல்விமுறை குறித்தும் வாய்ப்புகள் குறித்தும் அவர் பேசும் வசனங்களில் உண்மையான ஆதங்கம் வெளிப்படுகிறது. அர்ஜுன், எத்தனை ஆண்டுகளானாலும் தான் 'ஆக்ஷன் கிங்'தான் என்று சொல்லியிருக்கிறார். ரோபோ ஷங்கர் வெகு சில இடங்களில் சிரிக்கவைக்கிறார். அபய் தியோல், என்ன ஏதென்று தெரியாமல் வந்து மாட்டிக்கொண்ட வடஇந்திய வில்லன்கள் லிஸ்ட்டில் சேருகிறார். பரிதவிப்பு மிக்க தந்தைகளாக அழகம்பெருமாளும் இளங்கோ குமரவேலும் பக்குவமான நடிப்பை தந்திருக்கிறார்கள். நாயகி கல்யாணி பிரியதர்ஷனுக்கு பலமில்லாத பாத்திரம், ஆனால் அவரது நடிப்பில் குறைகளில்லை. இவானா, தனது நடிப்பால் மனதில் நிற்கிறார், 'அவரது தமிழால்' சற்று தள்ளியே நிற்கிறார்.

பி.எஸ்.மித்ரன், பொன்.பார்த்திபன் உள்பட நான்கு பேர் இணைந்து எழுதியுள்ள 'ஹீரோ' நல்ல கருத்தை சொல்கிறான். இன்னும் கொஞ்சம் கள ஆய்வு செய்து தெளிவான நிலைப்பாட்டுடனும் அதை பிரதிபலிக்கும் சுவையான, சுவாரஸ்யமான திரைக்கதையுடனும் சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.