தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனையடுத்து தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சூழலில் தான் சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மையத்தின் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்று (10.12.2024) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொது அவர் பேசுகையில், ''காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த நான்கு நாட்கள் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கும். 11ஆம் தேதி (இன்று) டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் இருக்கிறது.
12ஆம் தேதி திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். திருவள்ளூர் தொடங்கி நாகப்பட்டினம் வரையிலான வடகடலோர மாவட்டங்களிலும் வேலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. 13ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். சில நேரங்களில் 55 கிலோமீட்டர் வேகத்தில் 13ம் தேதி வரை சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 45 சென்டிமீட்டர். இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 40 சென்டிமீட்டர். இது இயல்பை விட 14 சதவீதம் அதிகம்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (11.12.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்குள்ளாக மழைக்கு வாய்ப்பு உள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.