தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனையடுத்து தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சூழலில் தான் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நாளை (10.12.2024) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் (11.12.2024) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
12ஆம் தேதி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 13ஆம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக பேரிடர் மேலாண்மைத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ராஜேஷ் லாக்கார்னி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும் நிலையான வழிகாட்டு விதிமுறைகளின் படி பேரிடர்களை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்றால் உடனடியாக பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.