Skip to main content

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை!

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
Heavy rain in 16 districts of Tamil Nadu today

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர். அதே சமயம் வடசென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியாத நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தஞ்சை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியில் 12 செ.மீ மழை பொழிந்துள்ளது. குண்டேரிப்பள்ளம், பந்தலூரில் தலா 10 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

திரைப்பட விருதுகள் விழா; தமிழக அரசு அறிவிப்பு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Film Awards Ceremony; Tamil Govt Announcement

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் விழா நாளை நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் திரைப்பட விருதுகளை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் வழங்குகிறார். மொத்தம் 39 விருதாளர்களுக்கு காசோலை, தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட இருக்கின்றன.

2015 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது இறுதிச்சுற்று படத்திற்காக ஆர்.மாதவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களுக்காக தனி ஒருவன், பசங்க 2, பிரபா, இறுதிச்சுற்று, 36 வயதினிலே ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகையாக ஜோதிகா (36 வயதினிலே), சிறந்த நடிகர் சிறப்பு பரிசு - கௌதம் கார்த்திக் (வை ராஜா வை), சிறந்த நடிகை சிறப்பு பரிசு ரித்திகா சிங் (இறுதிச்சுற்று), சிறந்த வில்லன் அரவிந்த்சாமி (தனி ஒருவன்), சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது - சிங்கம் புலி (அஞ்சுக்கு ஒண்ணு) அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர் சுதா கொங்கரா (இறுதிச்சுற்று), சிறந்த கதை ஆசிரியர் மோகன் ராஜாவுக்கு (தனி ஒருவன்), சிறந்த இசையமைப்பாளர் ஜிப்ரான் (உத்தம வில்லன்/ பாபநாசம்), சிறந்த ஒளிப்பதிவாளர் ராம்ஜிக்கும் (தனி ஒருவன்) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Prime Minister Modi will visit Tamil Nadu today

பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த 27 மற்றும் 28 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தார். அதன்படி 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து இரண்டாவது நாளாக கடந்த 28 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று (04-03-24) தமிழகம் வருகிறார். அதன்படி, பிற்பகல் 02.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 3.20 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு சென்று ரியாக்டர் திட்டத்தை பார்வையிடுகிறார். அதன்பின், அங்கு நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொள்கிறார். பிரதமர் வருகையையொட்டி கல்பாக்கத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் என 10 மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 10 வெடிகுண்டு சோதனைக் குழு, 8 மோப்ப நாய்கள் மற்றும் கடலோரப் படை மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கல்பாக்கம் அணுமின் நிலைய நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மாலை 04.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானம் வருகிறார். அங்கு, 5 மணிக்கு பா.ஜ.க சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதால் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும் பிரதமர் மோடி மாலை 06.15 மணிக்கு கார் மூலம் சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹைதராபாத் புறப்பட்டு செல்கிறார்.