Skip to main content

வேலூர் அருகே ஆசிரியை தற்கொலை; தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் 

Published on 23/08/2022 | Edited on 23/08/2022

 

police siren

 

வேலூர் அருகே ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

 

வேலூர் குடியாத்தம் அருகில் உள்ள நெல்லூர் பேட்டை அரசு மகளிர் பள்ளியில் தையல் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் நாகேஸ்வரி. இவர் சில தினங்களுக்கு முன்பு  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது தொடர்பாக அவரது மகன் காவல்துறையில் புகார் கொடுத்தார். அந்த புகாரை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் நாகேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் "நாகேஸ்வரி மருத்துவ விடுப்பில் சென்றிருந்ததும், விடுப்பு  முடிந்து மீண்டும் பணியில் சேர மருத்துவ சான்றிதழ்  உடன் நாகேஸ்வரியும் அவரது மகனும் பள்ளிக்கு சென்ற போது அப்பள்ளியின் தலைமை ஆசிரியை, நாகேஸ்வரியை தரக்குறைவாக பேசி அமரவைக்காமல், கொண்டு வந்த மருத்துவ சான்றிதழையும் பெற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பியதால் மனமுடைந்த நாகேஸ்வரி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்" என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் காவல் துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

 

இந்நிலையில் வார விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இறந்த  தையல் ஆசிரியை நாகேஸ்வரிக்காக துக்கம் அனுசரித்தனர். 11 மணியளவில் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் தலைமை ஆசிரியையின் மீது  நடவடிக்கை எடுக்கக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வந்த வட்டாச்சியர் மற்றும் கோட்டாச்சியர் ஆசிரியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை களைந்து செல்ல வைத்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலினை தற்காலிக பணியிடைநீக்கம் செய்வதாக தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்