தமிழர் திருநாளான பொங்கல் திருநாள், போகி பண்டிகையுடன் தொடங்கி (13.01.2025) தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சென்னை, மேற்கு மாம்பலத்திலுள்ள கோசாலையில் கடந்த 15ஆம் தேதி (15.01.2025) அன்று மாட்டுப்பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கோமியம் குறித்து அவர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, “கோமியம் சிறந்த மருத்துவ குணத்தைக் கொண்டது. காய்ச்சலைக் குணமாக்கும். பாக்டீரியா பாதிப்பு, பூஞ்சை பாதிப்புகளுக்கு எதிராகக் கோமியம் செயல்படக் கூடியது. மேலும் இது, செரிமான கோளாறு உள்ளிட்ட உடல் பாதிப்புகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது” எனப் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடியின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் அருகே இட ஒதுக்கீட்டுப் போராளிகளுக்காகக் கட்டப்பட்டுள்ள மணிமண்டப கட்டடத்தைத் தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் பழனி, நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் உறுப்பினர் கௌதமசிகாமணி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ள கருத்து குறித்துப் பேசுகையில், “அறிவியல் ரீதியிலான, அகில இந்திய அளவில் மிகச்சிறந்த ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனத்தின் இயக்குநர் இவ்வாறு பேசுவது என்பது உண்மையில் வருந்தத்தக்கது.
மாட்டு மூத்திரத்தை முதலில் அவர் குடிக்கட்டும். அவர் குடித்துக் கொண்டிருப்பதாக நினைக்கிறேன். அதனால் தான் இவ்வாறு பேசுகிறார்.மாட்டு மூத்திரம் உடலுக்கு கேடு என அறிவியல் ரீதியாகச் சொல்லப்பட்டிருக்கிற இந்தக் காலகட்டத்தில், அறிவியல் ரீதியான கல்வி நிறுவனத்தின் இயக்குநர் இதனைச் சொல்லியிருப்பது எந்த அடிப்படையில், எதற்கான காரணம் என்றே புரியவில்லை. மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவரும் ஆளுநர் போல் மாறிவிட்டார் எனத் தெரிகிறது. அந்த அடிப்படையில் தான் இது போன்ற கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. ஆகவே இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.