Skip to main content

'திராவிட மாடலுக்கு ஐந்தாம் தலைமுறையாக பொறுப்பேற்று இருக்கிறார்' - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் பணி சிறக்க அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று மதியம் அண்ணாசாலை தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். மேலும் அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''திமுகவின் இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் அங்கம் பெறுவதற்காகப் பொறுப்பு எடுத்துக் கொண்டார். அவர் சிறப்பாக பணியாற்றுவார் என்பது அனைவருடைய நம்பிக்கை. நிறைய அனுபவங்களைப் பெற்றிருக்கக் கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. கலைஞர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் சிறிய வயதிலிருந்து அவரை உற்றுப் பார்க்கின்ற வாய்ப்பையும், முதல்வர் ஸ்டாலின் துணை முதலமைச்சராகி, மேயராகி, இன்றைக்கு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் அவரோடு நெருக்கமாக இருந்து நிர்வாகத் திறனைப் பார்க்கின்ற வாய்ப்பையும் பெற்றவர்.

 

எனவே ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தினுடைய செல்லப்பிள்ளை அவர். கலைஞரின் பேரப்பிள்ளை, எதிர்கால தமிழர்களுடைய முகவரியாகத் திகழக்கூடியவர். எனவே அவர் சிறப்பான முறையில் பணியாற்றி தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ,பேராசிரியர், முரசொலி மாறன் போன்ற தலைவர்கள் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், திராவிட மாடல் ஆட்சிக்கும் பொறுப்பேற்று இருக்கின்ற நமது தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுடைய வழியில் பயணத்தை மேற்கொள்வார்.

 

சிறந்த முறையில் திராவிட மாடலுக்கு ஐந்தாம் தலைமுறையாகப் பொறுப்பேற்று இருக்கிறார். இனி நூறு ஆண்டுக் காலம் திராவிடத்தினுடைய பாரம்பரியத்தைக் கட்டிக் காத்து, இன்னும் நூறாண்டு காலத்திற்குக் கழகத்தை எடுத்துச் செல்ல உதயநிதி கழகப் பணி ஆற்றுவார் என்று வாழ்த்துகிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்துகளில் புதிய வசதியைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Minister Udayanidhi started a new facility in government buses

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரக அலுவலகத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 புதிய பேருந்துகள் இயக்கத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (28.02.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், பாரத ஸ்டேட் வங்கியுடன் (SBI) இணைந்து மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் (Electronic Ticketing Machine) மூலமாக மின்னணு பயணச்சீட்டு (e-Ticketing) வழங்கும் திட்டத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தலைமை தாங்கினார்.

இந்த திட்டத்தினால் பயணச்சீட்டு வழங்கும் வேகம் மற்றும் எளிதான பயன்பாட்டிற்காக, பேருந்துகளில் மின்னணு பயணச் சீட்டு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து நடத்துநர்கள் இதன் மூலம் பயணிகளிடம் ரொக்கப் பணம், ஏடிஎம் அட்டை, கடன் அட்டை மற்றும் யூபிஐ மூலம் பணம் பெற்றுக் கொண்டு, பயணச் சீட்டு வழங்குவார்கள். இதனால் பேருந்துகளில் பயணிகள் ரொக்கப் பணம் எடுத்துச் செல்லாமல் பயணச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு நடைவாரியாகவும் மற்றும் நிலை (ஸ்டேஜ்) வாரியாகவும் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மற்றும் வசூல் விவரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திரரெட்டி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ்,  இணை மேலாண் இயக்குநர் .க.குணசேகரன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா.மோகன், அரசு உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

'அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து'- நீதிமன்றம் தீர்ப்பு  

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
'Cancellation of the order releasing Minister I. Periyasamy'-Court verdict

வீட்டுவசதி துறையில் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்படுவதாக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி அதிகாரத்தை பயன்படுத்தி அன்றைய முதல்வர் கலைஞரின் பாதுகாவலர் ஒருவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

இந்த வழக்கினுடைய விசாரணை கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில்  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அந்த தீர்ப்பில், 'சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமியை  விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் வழக்கு சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். முறையாக ஒப்புதல் பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்' என உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மேலும், மார்ச் 28ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய் பிணை செலுத்த வேண்டும் எனவும் ஐ.பெரியசாமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த விசாரணையை சிறப்பு நீதிமன்றம் 2024 ஜூலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.