Skip to main content

நாங்குநேரியில் சம்பவம்;  விளக்கம் கேட்ட தலைமை ஆசிரியையை தாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியை

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

Govt school teacher assaulted headmistress in Nanguneri

 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தளபதி சமுத்திரம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கண்ணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டெல்லா ஜெயசெல்வி என்பவர் வேதியியல் ஆசிரியையாக  பணியாற்றி வருகிறார். இவர் இந்த பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகளிடம் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி திட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில், வழக்கம் போல், ஒரு மாணவியிடம் அவதூறாக பேசியுள்ளார். இதனால், மனமுடைந்து போன அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர் பள்ளித் தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியிடம் இது குறித்து புகார் அளித்தனர். இது போன்று தொடர் புகார் வருவதால், இது குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி தலைமை ஆசிரியை, ஸ்டெல்லாவிடம் கூறியுள்ளார். 

 

இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியை ஸ்டெல்லா, தலைமை ஆசிரியையை அவதூறாக பேசி தாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், அவர் கழுத்தில் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியையும் ஸ்டெல்லா பறித்துள்ளார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின்னர் தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த காவல்துறையினர், ஸ்டெல்லாவிடம் இருந்த தங்கச் சங்கிலியை மீட்டு தலைமை ஆசிரியை ஜெயந்தியிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசெல்வி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமியிடம் பாலியல் சீண்டல்; அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடைநீக்கம்

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

salem omalur government school headmaster suspended

 

ஓமலூர் அருகே, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே எம்.செட்டிப்பட்டியில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில், வேலக்கவுண்டனூரைச் சேர்ந்த மயில்வாகனன் (50) என்பவர் ஆசிரியராக பணியாற்றினார். அந்தப் பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் சிறுமிகளை தனியாக அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக மயில்வாகனன் மீது அண்மையில் புகார்கள் கிளம்பின. இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு மீண்டும் ஒரு சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். 

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, பெற்றோரிடம் அழுது புலம்பினார். அதன்பேரில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓமலூர் மகளிர் காவல்நிலையத்திற்குத் திரண்டு சென்று ஆசிரியர் மயில்வாகனன் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தனர். புகாரில் முகாந்திரம் இருந்ததை அடுத்து, காவல்துறையினர் மயில்வாகனன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

 

இதையடுத்து, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ராஜூ அவரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆசிரியர்கள் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் வருவது பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

Next Story

பள்ளியில் திடீர் விசிட் அடித்த மாவட்ட ஆட்சியர்; தாமதமாக வந்த ஆசிரியர்கள் மீது அதிரடி நடவடிக்கை

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

The district collector paid a surprise visit to the school; Action taken against late teachers

 

விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் கிராமத்தில் உள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நேற்று (24-11-23) தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவிற்கு அம்மாவட்ட ஆட்சியர் பழனியும் பங்கேற்றார். அதன் பின்னர், மாவட்ட ஆட்சியர் பழனி விழா முடிந்தவுடன் அருகே உள்ள கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோவிந்தாபுரம், திருப்பச்சாவடிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 

அதில், கோவிந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சமையல் அறைக்குச் சென்ற ஆட்சியர் பழனி, அங்கு மாணவர்களுக்குத் தயாரிக்கப்படும் காலை உணவை உண்டு பரிசோதித்தார். அதன் பின்னர், அருகில் இருக்கக்கூடிய தொடக்கப்பள்ளிக்கு சென்றார். அங்கு 25க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வந்தனர். பள்ளி துவங்கும் நேரமாகி பள்ளி தலைமை ஆசிரியர் அங்கயற்கண்ணி மற்றும் ஆசிரியை மாலதி ஆகியோர் பணிக்கு வராததைக் கண்டு மாவட்ட ஆட்சியர் பழனி அதிர்ச்சியடைந்தார்.

 

அதன்பின், அவர் அங்குள்ள மாணவர்களிடம் நடத்தப்பட்ட பாடங்கள் குறித்தும், மனப்பாட பகுதிகளை ஒப்புவிக்கச் சொல்லியும் கேட்டார். மேலும், மாணவ மாணவிகளுக்கு பாடமும் நடத்தினார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனை தொடர்பு கொண்டு, பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் 2 பேர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், அவர்களைப் பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாடம் நடத்தும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.