Skip to main content

“ஆளுநர் என்னைச் சந்திப்பதில் துளியும் விருப்பமில்லை” - கீழ்வெண்மணி தியாகி பழனிவேல்

Published on 28/01/2024 | Edited on 28/01/2024
The Governor of Tamil Nadu has no interest in meeting me Kilivenmani Tyagi Palanivel

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (28.01.2024) நாகைக்கு செல்ல உள்ளார். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு இல்லத்திற்கு செல்ல உள்ளார். அங்கு கடந்த 1968 ஆம் ஆண்டு கீழ்வெண்மணியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குண்டு பாய்ந்து உயிர் தப்பிய தியாகி பழனிவேலை சந்திக்க உள்ளார்.

இந்நிலையில் கீழ்வெண்மணி தியாகி பழனிவேல் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இப்போது உள்ள சூழ்நிலையில் ஆளுநரை சந்திப்பதில் தனக்கு விருப்பம் இல்லை. நிலக்கிழார்களுக்கு எதிராக போராடியவர்களில் நானும் ஒருவன். இந்த போராட்டத்தின்போது குண்டடிபட்டு காயமுற்று பாதிக்கப்பட்டேன்.

அப்போது எல்லாம் வந்து என்னை சந்திக்காதவர்கள் இப்போது அவசர அவசரமாக வந்து சந்திப்பது ஏன். அரசியல் ஆதாயத்திற்காக சந்திக்க வருகிறார்கள். என்னை பாஜக கட்சிக்கு இழுப்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி என்னை வந்து சந்திக்கவுள்ளார். தமிழக ஆளுநர் என்னை சந்திப்பதில் எனக்கு துளியும் விருப்பமில்லை” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.