Government of Tamil Nadu files report on measures taken to control dengue and corona infections

கரோனா உள்ளிட்ட தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த 2,715 கூடுதல் சுகாதார ஆய்வாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் டெங்கு நோய் பரவலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் வழக்கு தொடர்ந்தார்.

Advertisment

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் செல்வகுமார் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

அதில், டெங்கு நோயைப் பரப்பும் கொசு உற்பத்தியைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், டெங்கு நோயைப் பரப்பும் கொசு புழுக்களை உண்ணக்கூடிய மீன்களைஏரி குளங்களில் வளர்ப்பதாகவும், வீடுகள் மற்றும் தெருக்களில் புகை போட்டு கொசுக்கள் அழிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு பரவும் பகுதிகளை ஆய்வு செய்ய வேலூர், கடலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 9 இடங்களில் மண்டல பூச்சியியல் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு நோய் பரவும் இடங்களை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் எனஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள 2,894 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களில் 384 பணிகள் காலியாக உள்ளதாகவும், அதை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா உள்ளிட்ட தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த 2,715 கூடுதல் சுகாதார ஆய்வாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நோய் சிகிச்சைக்காக முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், ஐந்து லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் எனவும்,மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாகவும், டெங்கு அபாயம் இருக்கும் பகுதிகளில் முன்னுரிமை அளித்து டெங்கு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை நான்கு வாரத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.