Skip to main content

காலையிலேயே தள்ளாடித் தவழ்ந்து வந்த அரசுப் பள்ளி ஆசிரியர் இடமாற்றம்!

Published on 14/07/2023 | Edited on 14/07/2023

 

Government school teacher transfer in edappadi

 

இடைப்பாடி அருகே, காலையிலேயே மது குடித்துவிட்டு போதையில் பணிக்குத் தள்ளாடியபடி வந்த அரசுப் பள்ளி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார். 

 

சேலம் மாவட்டம், இடைப்பாடியை அடுத்துள்ள அரசிராமணி மலைமாரியம்மன் கோயில் அருகில், அரசுத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் செட்டிப்பட்டியைச் சேர்ந்த அறிவழகன் (55) என்பவர் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். 

 

ஜூலை 11 ஆம் தேதி காலை வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார் அறிவழகன். பள்ளி அருகே சென்றபோது அவர் மதுபோதையில் தடுமாறி கீழே விழுந்தார். இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பள்ளிக்கு வந்து விசாரித்தனர். ஆசிரியர் அறிவழகன் மது போதையில் பணிக்கு வந்தது தெரியவந்தது.

 

இதையடுத்து, ஊர் பொதுமக்கள் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், ஜூலை 12 ஆம் தேதி, மாவட்டக் கல்வி அலுவலர் விஸ்வநாதன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ், புகாருக்குள்ளான ஆசிரியர் அறிவழகன், மாணவர்கள், பெற்றோர்களிடம் விசாரணை நடந்தது. முதல்கட்ட விசாரணையில் அறிவழகன் மீதான புகார் உறுதியானது. 

 

இதையடுத்து அவரை உடனடியாக சங்ககிரி அருகே உள்ள சந்தைப்பேட்டை அரசுத் தொடக்கப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ''ஆசிரியர் அறிவழகன் பணி நேரத்தில் மது போதையில் வந்ததாக ஏற்கனவே ஒருமுறை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்ற புகாரில் தற்போதும் சிக்கியுள்ளார். முதல்கட்டமாக அவரை இடமாற்றம் செய்திருக்கிறோம். அவரிடம் விளக்கம் கேட்டுக் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்