Skip to main content

பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய அரசுப் பள்ளி ஆசிரியர் கைது! 

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

Government school teacher arrested

 

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள  அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500 மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் வேதியியல் பாடப்பிரிவு ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீதர்(44). இவர், தன்னிடம் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவிகளிடம் வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக உரையாடியதாகவும், செல்போனில் ஆபாசமாகப் பேசியதாகவும், மாலை நேர வகுப்புகளில் அத்துமீறியதாகவும், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் மாணவிகளின் பெற்றோர்கள் கடந்த 10  தினங்களுக்கு முன் சென்னை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிற்குப் புகார் அளித்திருந்தனர்.

 

வேதியியல் ஆசிரியர் ஸ்ரீதரால் பாதிக்கப்பட்ட 2 மாணவிகள், ஸ்ரீதரின் பாலியல் தொல்லை தொடர்பான ஆடியோ, வாட்ஸ் அப் சாட் உள்ளிட்ட ஆதாரங்களுடன் குழந்தை நலக் குழுவிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, குழந்தை நல அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பள்ளிக்கு விசாரணைக்கு வந்த குழந்தைகள் நலக்குழு அப்படியே இவ்வழக்கைக் கிடப்பில் போட்டுள்ளது.

 

இது தொடர்பான ஆடியோக்கள் மற்றும் ஆபாச வாட்சப் சாட் போன்றவற்றை சமூக வலைத்தளங்களில் மூலமாக வைரலான நிலையில் மீண்டும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் விசாரணையைத் துவக்கினர். விசாரணையில் கடந்த கல்வி ஆண்டில் சில மாதங்கள் ஆன்லைன் வகுப்பு நடந்து வந்தபோது ஆசிரியர் ஸ்ரீதர் மாணவிகளுடன் வகுப்பு எடுக்கும் நேரத்தில் பேசி வந்ததும், தனது அத்துமீறலை அறியாமையால் அனுமதித்த ஒரு சில மாணவிகளை மட்டும் குறிவைத்து கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் அந்த வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் மாணவிகளின் நேரடி விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

 

இதற்கிடையில் நேரடி வகுப்புகள் தொடங்கிய பிறகு சில மாணவிகளுடன் ஆசிரியர் ஸ்ரீதர் வெளியில் செல்வதும், வகுப்பு நேரம் முடிந்த பிறகு பள்ளி வகுப்பறையிலேயே அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ/மாணவிகளுக்கான நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளராக இருந்ததும் அதனைப் பயன்படுத்தியும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாணவிகளை வைத்து அவர்களுடன் படிக்கும் மற்ற மாணவிகளுக்கு ஸ்ரீதர் பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்ததும் தெரியவந்தது. 

 

இந்த நிலையில் பள்ளி மாணவிகளுடன் ஆசிரியர் ஸ்ரீதர் உரையாடிய வாட்ஸ் அப் சாட்டுகள் மற்றும் போனில் பேசிய உரையாடல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து ஆசிரியர் ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் இன்று திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

புகாரின் பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர்  போலீசார் போக்சோ மற்றும் தொழில்நுட்ப தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் ஸ்ரீதரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக பள்ளி முன்பு கூடிய முன்னாள் மாணவிகள் இருதரப்பினர் ஆசிரியர்  ஸ்ரீதருக்கு ஆதரவாகவும் எதிராகவும் மாறி மாறி பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

ஸ்ரீதரும் அவரது மனைவியும் மாணவிகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளதாகவும், ஸ்ரீதரின் செல்போனை ஹேக் செய்து இது போன்ற ஆபாச குறுந்தகவல்களை வேறு யாரோ அனுப்பி விட்டதாகவும் அந்த முன்னாள் மாணவிகள் சிலர் சொல்லிவருகிறார்கள்.  

 

 

சார்ந்த செய்திகள்