Skip to main content

அரசுப் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து மாணவி படுகாயம்

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

government school roof collapsed and the student was seriously injured

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மல்லாபுரம் கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 250க்கும் மேற்பட்ட பிள்ளைகள் படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு மாணவர்கள் வருகை புரிந்தனர். இந்நிலையில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒன்றாம் வகுப்பு மாணவி சுபிஸ்னாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியேறி ஓடினார்கள். பிள்ளைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மற்ற வகுப்பறைகளில் இருந்த மாணவ மாணவிகளை வெளியேற்றினார்கள்.

 

தலையில் காயம்பட்ட மாணவிக்கு நான்கு தையல்கள் போடப்பட்ட நிலையில்  தற்போது மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்பள்ளிக் கட்டடம் கடந்த 30- ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அது தரமான முறையில் கட்டப்படவில்லை அதன் காரணமாக நாளடைவில் இப்பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை மழைநீரால் அரிக்கப்பட்டு சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சங்கராபுரம் வட்டாரக் கல்வி அலுவலர் தர்ஷிகா மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியரை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் தரமற்ற முறையில் இருக்கும் பள்ளிக் கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு அரசு உத்தரவிட்டு, அதன்படி பல்வேறு பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பள்ளிக் கட்டடம் தரம் இல்லாமல் இருந்தும் அப்புறப்படுத்தவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வட பொன்பரப்பி போலீசார் பெற்றோர்களை சமாதானம் செய்து இதுகுறித்து அதிகாரிகள் விரைவில் ஆய்வு செய்து கட்டடத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். பள்ளி நடந்து கொண்டிருந்த போது பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்