Skip to main content

இடிந்து விழும் நிலையில் அரசுப் பள்ளி... மாணவர்களை மரத்தடியில் அமர வைத்த பெற்றோர்கள்!

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 


தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் தொடங்கப்பட்ட ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளி கட்டிடங்கள் பல ஆண்டுகளாக முழுமையாக சேதமடைந்து எப்போது விழும் என்ற நிலையில் உள்ளது. இதனால் ஏராளமான அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியிலும் சமுதாயக்கூடங்களிலும் வகுப்புகள் நடப்பதை ஏற்கனவே நக்கீரன் பல முறை சுட்டிக்காட்டியது. பல பள்ளி மேற்கூரைகள் இடிந்து விழுந்து மாணவர்கள் காயமடைந்ததையும் கூறியிருந்தோம். அதன் பிறகும் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் தற்போது வரை மேற்கூரைகள் உடைவது வழக்கமாகவே உள்ளது.

 

நேற்று முன்தினம் விடுமுறை தினம் முடிந்து பட்டுக்கோட்டை நகராட்சி தொடக்கப்பள்ளி வகுப்பறைக்கு சென்ற ஆசிரியர்களுக்கு பேரதிர்ச்சி காரணம் வகுப்பறை மேற்கூரை உடைந்து கிடந்தது. விடுமுறை நாள் என்பதால் மாணவர்கள் காயமின்றி தப்பினார்கள். ஒவ்வொரு நாளும் இப்படி பல சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. கரோனாவுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் வகுப்பறைகள் பற்றாக்குறையும் அதிகமாக உள்ளது. ஆனால் புதிய வகுப்பறை கட்டிடங்கள் பல வருடங்களாக கட்டப்படாததால் இடநெருக்கடியில் படிக்கிறார்கள் மாணவர்கள்.

 

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 117 மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளியில் ஒரு பழைய ஓட்டு கட்டிடம் உடைந்து கொட்டிக் கொண்டிருப்பதை நக்கீரன் செய்தியில் படத்துடன் வெளிக்காட்டி இருந்தோம். அதன் பிறகு அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுத்து ஒப்பந்தம் விடப்பட்டும் இடிக்கப்படவில்லை.

 

தற்போது மழை பெய்து வருவதால் இந்த கட்டிடம் இடிந்து கொட்டினால் அருகில் உள்ள வகுப்பறை கட்டிடமும் பாதிக்கப்படும் என்பதால் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர்கள் இணைந்து பள்ளி நுழைவாயிலில் நின்று ஆபத்தான உடைந்த கொட்டிக் கொண்டிருக்கும் பள்ளி மற்றும் சமையல் கூடங்களை இடித்து அகற்றும் வரை தங்கள் குழந்தைகளை பள்ளிக்குள் அனுப்பமாட்டோம் என்று மாணவ, மாணவிகளை மரத்தடி நிழலில் அமர வைத்திருந்தனர்.

 

இந்த தகவல் அறிந்து வந்த திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன் பெற்றோர்கள் மற்றும் ஒப்பந்தக்காரருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு நாளை விடுமுறை நாள் என்பதால் கட்டிடங்களை இடித்து அகற்றுவதாக உறுதி அளித்ததால் மாணவர்களை வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆபத்தான கட்டிடத்திற்கு அருகே உள்ள வகுப்பறையில் மாணவர்களை அமர வைக்க கூடாது என்று தற்காலிகமாக மரத்தடியில் வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டது.

 

கொத்தமங்கலம் பள்ளியில் பெற்றோர்கள் போராடியதால் ஆபத்தான பள்ளி கட்டிடம் இடிக்கப்பட உள்ளது.ஆனால் பெற்றோர்கள் போராடாமல் மனுக்கள் கொடுத்துவிட்டு பல வருடங்களாக ஆபத்தான நிலையில் காத்திருக்கும் கட்டிடங்களை எப்போது இடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது. மழைக்காலத்தில் கட்டிடங்கள் அதிகமாக இடிந்து கொட்டும் என்பதால் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் இடிக்கப்படும் கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டால் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் படிப்பார்கள் இல்லை என்றால் மரத்தடி, வராண்டா, சமுதாயக்கூடங்களில் தான் படிக்க வேண்டும். கல்வித்துறை தீவிர நடவடிக்கையிலேயே ஏழை மாணவர்களின் படிப்பும் பாதுகாப்பும் உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பள்ளி உணவில் அரணை; 92 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Food unsecurity in government school; 92 students admitted to hospital

சிதம்பரம் அருகே சாக்கான்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சாத்தங்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியில் பிப்ரவரி 12 ஆம் தேதி திங்கட்கிழமை மதிய உணவு பரிமாறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில், பள்ளியின் ஆசிரியர்கள் அவர்களை அழைத்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர்.

தொடர்ந்து மாணவர்கள் அதிகமானோர் மயங்கியதால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நடந்த சோதனையில் உணவில் அரணை விழுந்தது தெரியவந்தது. சிதம்பரம் அரசு மருத்துவமனை, புவனகிரி  மருத்துவமனை, சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் 92 மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவ - மாணவிகளுக்கு ஆபத்து இல்லை என மருத்துவர் தரப்பில் கூறப்படுகிறது.

Food unsecurity in government school; 92 students admitted to hospital

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் தலைமையில் சாத்தங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள சேதமடைந்த உணவுக் கூடத்தை சரி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட சமையலர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களை விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி உணவுக் கூடங்களைத் திடீரென ஆய்வு மேற்கொண்டு குறைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் உள்ள சிதம்பரம் - பிச்சாவரம் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து போகச் செய்தனர். இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, நகரச் செயலாளர் ராஜா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

Next Story

தேசிய கராத்தே போட்டியில் அரசுப் பள்ளி மாணவி சாதனை!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Trichy Government School Girl  Achievement in National Karate Competition

திருச்சி கோட்டை பெரிய கடை வீதி பகுதியில் உள்ள கோட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் சாய்னா ஜெட்லி. இவர் 23 உலக சாதனைகளையும் கின்னஸ் உலக சாதனையும் பெற்றவர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், துணை மேயர் திவ்யா தனக்கொடி, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் செல்வம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் பாரத் விபூஷன் விருது பெற்றுள்ளார். இவர் ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கட்டா பிரிவில் மூன்றாம் பரிசு பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கராத்தே பயிற்சியாளர் பிரபல டேக்வாண்டோ கிராண்ட் மாஸ்டர் கின்னஸ் உலக சாதனையாளர் டாக்டர் டிராகன் ஜெட்லி உள்பட பலர் பாராட்டினர்.