Skip to main content

அரசு அதிகாரிகளை வேலை வாங்கும் “புகார்பெட்டி” வாட்சப் குழு

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

தமிழ்நாட்டில் எந்த பகுதிகளுக்கு சென்றாலும் குடிநீர் வரவில்லை, சாலைகள் சரியில்லை, தெருவிளக்குகள் எரியவில்லை போன்ற அடிப்படை பிரச்சனைகள் இல்லாத கிராமங்களே இல்லை என்றே கூறலாம். மேலும் உள்ளாட்சி தேர்தலும் நடைபெறாததால் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இது போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய அரசு அதிகாரிகளும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. இப்படி கண்டு கொள்ளாத அதிகாரிகளை திரும்பி பார்க்க வைக்கிறார்கள் பசுமைத் தமிழ் தலைமுறை அமைப்பினர். இதுவரை கேள்விப்படாத வகையில், புகார்பெட்டி என்ற வாட்சப் குழுவை தொடங்கி இருக்கிறார்கள் இவ்வமைப்பினர். நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள  61 ஊராட்சிகளுக்கும் தனித்தனியாக “புகார்பெட்டி” என்கிற வாட்சப் குழுவைத் தொடங்கியிருக்கிறார்கள். இளைஞர்கள் மட்டுமே நிரம்பியிருக்கும் இக்குழு பொதுமக்களுக்கும் அரசுஅதிகாரிகளுக்கும் இணைப்பு பாலமாக செயல்பட்டு வருகிறது.
 

whatsapp complaint

 ஒவ்வொரு வாட்சப் குழுவிலும் அந்தந்த ஊராட்சிகளின் அரசு அதிகாரிகளும் இணைந்திருப்பார்கள். அந்தந்த பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை இந்த வாட்சப் குழுவில் புகைப்பட ஆதாரத்தோடு தெரிவிக்கிறார்கள். இப்புகாரை குழுவின் அட்மின்கள் உறுதி செய்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துகிறார்கள். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கானத் தீர்வையும் பெறுகிறார்கள். சரியானத் தீர்வை எட்டாத பிரச்சனைகளுக்கு தவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெற்றுத் தீர்வு காண்கிறார்கள் இந்த இளைஞர்கள். இதுகுறித்து பசுமைத் தமிழ் தலைமுறையின் இளம் தலைவரான சுகன் கிறிஸ்டோபர் நம்மிடம், “தங்கள் ஊரில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை யார்கிட்ட சொல்றதுனே தெரியாம கடந்து போய்டுறாங்க பொதுமக்கள். இத எப்படியாவது மாத்தனும்னு ஆரம்பிச்சதுதான் புகார்பெட்டி வாட்சப்குழு. இந்தக் குழுவில் தெரிவிக்க கூடிய புகார்களுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க வைப்போம். ஆரம்பத்துல நாங்க இப்படி பண்றத பொதுமக்கள் நம்பாமதான் இருந்தாங்க, இந்த குழு மூலமா ஒருசில அடிப்படை பிரச்சனைகள் தீர்ந்த அப்புறம்தான் நம்ப ஆரம்பிச்சாங்க. 
 

இப்ப எந்த ஊர்லயும் குடிநீர் வரவில்லை, தெருவிளக்குகள் எரியவில்லை என்றால் இந்த வாட்சப் குழு மூலமாகவே தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள். விவசாயத்திற்கு தண்ணீர் வரவில்லை என்றால், அதையும் அதிகாரிகளிடம் பேசித் தீர்த்து வைக்கிறோம். அதேபோல் அரசு அதிகாரிகளை அழைத்து வந்து மரக்கன்று நடுதல், இயற்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். மேலும் வருகிற உள்ளாட்சி தேர்தலில் இந்த 61 ஊராட்சிகளிலும் ஊராட்சித் தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடப் போகிறோம். மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களையும் வைத்திருக்கிறோம். இனி இளைஞர்கள் கையில் அரசாங்கம் வரவேண்டும்” என்கிறார். இந்த இளைஞர்களின் புதிய முயற்சிக்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்கள் மூலம் தவறானவற்றை கற்பதை விடவும் இவர்களைப் போல் மக்களுக்காக வேலை செய்வது, சமூகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல உதவும்.

சார்ந்த செய்திகள்