A government official caught

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் ரமேஷ் குமார் (வயது 51). இவர் திருவானைக்காவல் பகுதியில் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும்கடை சொந்தமாக நடத்தி வருகிறார். இவருக்கு கல்பாளையம் கிராமத்தில் சொந்தமாக வீடு உள்ளது. ரமேஷ் குமார், தனது தொழிலுக்கு பணம் தேவைப்பட்டதால் தனக்குச் சொந்தமான வீட்டின் பேரில் வங்கியில் கடன் கோரியுள்ளார்.

Advertisment

கடன் பெறுவதற்கு தனது வீட்டுமனையை உட்பிரிவு செய்து பட்டா பெற்று வருமாறு வங்கியில் கேட்டுள்ளனர். அதன் பேரில் ரமேஷ் குமார், தனது வீட்டினை உட்பிரிவு செய்து தனிப் பட்டா வேண்டி கடந்த 13.7.2023 அன்று விண்ணப்பித்துள்ளார். தான் விண்ணப்பித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்த தகவலும் கிடைக்கப் பெறாததால் ரமேஷ் குமார், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர்அலுவலகத்தில் உள்ள சர்வே பிரிவுக்கு கடந்த 28.8.2023 அன்றுகல்பாளையம் பிர்கா சர்வேயர் கருப்பையா (வயது 48) என்பவரை சந்தித்து, தனது விண்ணப்பத்தின் பேரில் உட்பிரிவு செய்து வழங்க வேண்டுமாறு கேட்டுள்ளார்.

Advertisment

அதற்கு பிர்கா சர்வேயர் கருப்பையா, ஒரு வாரம் கழித்து தன்னை வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார்.அதன் பேரில் ரமேஷ் குமார் கடந்த 5.9.2023 அன்று பிர்கா சர்வேயர் கருப்பையாவை சந்தித்து தனது வேலையை முடித்துக் கொடுக்குமாறு கூறியுள்ளார். அதற்கு சர்வேயர் கருப்பையா தனக்கு 6000 ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் சப் டிவிஷன் வேலையை முடித்து தருவதாகக் கூறியுள்ளார். பின் ரமேஷ் குமார் கேட்டுக் கொண்டதன் பேரில் ஆயிரம் ரூபாய் குறைத்துக் கொண்டு 5000 கொடுத்தால் மட்டுமே சப் டிவிஷன் வேலையை முடித்துக் கொடுக்க முடியும் என்று கருப்பையா கண்டிப்புடன் கூறியுள்ளார்.

கருப்பையாவிடம், ரமேஷ் குமார் இரண்டு மூன்று நாட்களில் பணத்துடன் வந்து சந்திப்பதாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ் குமார், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. மணிகண்டனிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின் பேரில் இன்று 8.9.23 மதியம் சுமார் 12 மணியளவில் கருப்பையாவை சமயபுரம் பைபாஸ் சாலையில் சந்தித்து ரமேஷ்குமார் பணத்தைக் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி ஆகியோர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கருப்பையாவை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.