Skip to main content

மாறி மாறித் தாக்கிக் கொண்ட அரசு மருத்துவரும் பெண் நோயாளியும்; வேலூரில் பரபரப்பு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Government doctor and female patient who took turns beating in Vellore

வேலூர் அடுத்த சாத்துமதுரை பகுதியைச் சேர்ந்தவர் சுபா(36) இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏழு நாட்களாக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில் இவரைக் காண ஆண் உறவினர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு ரவுண்ட்ஸ் வந்த முதுகலை மருத்துவம் பயிலும் மருத்துவர் விஷால் என்பவர் சுபாவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த படுக்கையில் அமர்ந்திருந்த ஆண் நபரிடம், இது பெண்களுக்கான வார்டு ஆண்கள் உள்ளே வரக்கூடாது என வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.

நான் யார் தெரியுமா, வெளியில எல்லாம் போக முடியாது... நீ போ என ஒருமையில் மருத்துவரிடம் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் முற்றியுள்ளது. திடீரென ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போது நோயாளி சுபாவும் மருத்துவரை தாக்கியுள்ளார். அதோடு தான் அணிந்திருந்த காலணியால் மருத்துவரை தாக்கியுள்ளார். இது நோயாளிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கிருந்து பெண் செவிலியர்கள் தடுக்க முடியாமல், ‘ஐயோ காப்பாத்துங்க காப்பாத்துங்க...’ என கத்தினர். அதன்பின் அருகில் இருந்த நோயாளியை பார்க்க வந்தவர்கள் இரு தரப்பையும் விலக்கி விட்டுள்ளனர்.

மருத்துவர்கள் தரப்பிலிருந்து காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு கூறியதும், மருத்துவமனைக்கு வந்த வேலூர் தாலுகா காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது மருத்துவரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட முதுகலை மருத்துவ மாணவர் விஷால் அளித்த புகாரின் அடிப்படையில் பணியில் உள்ள மருத்துவரை தாக்குவதை தடுக்கும் சட்டத்தின் கீழ், பணி செய்ய விடாமல் தடுக்கும் சட்டம், தாக்குதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் மருத்துவரை தாக்கிய பெண் நோயாளி சுபா மற்றும் அவரது உறவினர் திவாகர் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நோயாளி சுபா கூறுகையில், நான் கடந்த ஏழு நாட்களாக இங்கு சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு மன அழுத்தமும் உள்ளது. இந்நிலையில் என்னை காண வந்த உறவினரை வார்டுக்கு வந்த மருத்துவர் ஒருமையிலும், அவதூறாகவும் பேசினார். இதை நான் கேட்டதற்கு என்னையும், என் தாயாரையும் தகாத வார்த்தைகளால் அவதூறாக திட்டினார். பின்னர் மருத்துவர் தான் எங்களை முதலில் அறைந்தார். அதன் காரணமாகவே மருத்துவரை தாக்கியதாக தெரிவித்தார். 

இதுகுறித்து வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாப்பாத்தியிடம் கேட்டபோது, “பெண்கள் வார்டில் ஆண்கள் நுழையக்கூடாது. ஆனால் அந்த நபர் படுக்கையில் படுத்துள்ளார். இதை கேட்டதற்கு மருத்துவரை தாக்கியுள்ளார்கள். செவிலியர்கள் விலக்கிய போதும் செருப்பால் பெண் நோயாளி மருத்துவரை தாக்கியுள்ளார். புகார் அளித்துள்ளோம், காவல்துறை நடவடிக்கை எடுக்கும். அவர்கள் கூறியதில் உண்மைத்தன்மை இல்லை” எனக் கூறினார்.

அரசு மருத்துவமனையில் நோயாளி, மருத்துவர் இடையே ஏற்பட்ட இந்த மோதல் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சார்ந்த செய்திகள்

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.

Next Story

"ஊருக்குள் வரக் கூடாது அங்கேயே நில்லுங்கள்” - அமைச்சருக்கு எதிர்ப்பு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kanikapuram area People  struggle against Minister Durai Murugan

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இராமாபுரம் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் நேற்று அமைச்சர் துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்த் அவர்களுக்கு வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அமைச்சர் உட்பட அரசியல்வாதிகள் வருவதை கண்ட அப்பகுதி மக்கள் சாலையை வழிமறித்து ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.

அப்போது ஒரே சமூகத்தினர் உள்ள ஊரில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு சாலையில் மரக்கட்டைகளும்,  இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஊருக்குள் நுழைய விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து நுழைய முயற்சித்த கட்சியினரை ஊருக்குள் வராதே, என்ன செய்தார் எம்.பி. 5 ஆண்டுகளில் சாலை கூட சரியாக போடவில்லை. எங்கள் ஓட்டு உங்களுக்கு இல்லை என எதிர்ப்பை தெரிவித்து ஊருக்குள் வர விடாமல் தடுத்தனர்.  இதனால் அங்கு வாக்குவாதம் ஆகி பரபரப்பாகியது மேலும் அத்துமீறி நுழைந்தால் வாகனத்தின் மீது மது பாட்டிலும், கற்களையும் வீசி கண்ணாடியை உடைப்போம். அசிங்கப்படாமல் போய்விடுங்கள் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்காமல் வந்த வழியே திரும்பிச் சென்றனர். தனது சமூகத்தைச் சேர்ந்த நபர்களிடம் வாக்கு சேகரிக்க வந்த அமைச்சர் துரைமுருகனை அதே சமூகத்தினர் விரட்டியடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.