Skip to main content

“உழவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நற்செய்தி...” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Good news that brings joy to the farmers CM MK Stalin

பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களிலிருந்து விவசாயப் பயன்பாட்டிற்கும் மற்றும் பானைத் தொழில் செய்யவும் மண், வண்டல் மண், களிமண் எடுக்க மாவட்ட ஆட்சியர்களால் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்த நல்ல மழைப்பொழிவால் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் நீர் தேங்கி இருந்த நிலையில், வேளாண் பெருமக்கள், மண்பாண்டம் செய்பவர்கள் போன்றோர் மண் எடுத்து பயன்பெற்றிட இயலாத சூழ்நிலை இருந்தது. தற்போது இந்த நீர் நிலைகளில் நீர் இருப்பு குறைவாக இருக்கக்கூடிய சூழ்நிலையில், இவற்றை தூர்வாரி, கொள்ளளவை உயர்த்தினால், வரும் மழைக்காலத்தில் அதிக அளவு மழை நீரை சேமிக்க இயலும். இவ்வாறு மண்எடுத்து விவசாயப் பயன்பாட்டிற்காக பயன்படுத்திட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் பல வரப்பெற்றுள்ளன.

தற்போதுள்ள விதிகளில், விவசாய பயன்பாட்டிற்கும், பானைத் தொழில் செய்வதற்கும் அதே கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள கிராமப் பகுதியிலோ உள்ள நீர்நிலைகளிலிருந்து மட்டுமே மண் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், பல தகுதியான பயனாளிகளுக்கு தேவையான மண் கிடைக்காத நிலை உள்ளது. மேலும், இது போன்ற பயன்பாடுகளுக்கு அனுமதி பெற சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று, மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று மண் எடுக்க இயலும். இதனால், பயனாளிகளுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் போது, மேற்கூறிய பிரச்சனைகளையும் களைந்து புதிய எளிதான நடைமுறையை வகுத்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார். 

Good news that brings joy to the farmers CM MK Stalin

இதன் அடிப்படையில், சிறுகனிம விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், மற்றும் கால்வாய்களிலிருந்து கட்டணம் இல்லாமல் விவசாயப் பயன்பாட்டிற்கும் மற்றும் பானைத் தொழில் செய்வதற்கும் மண் எடுக்க சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களே இணைய வழியில் அனுமதி வழங்கும் வகையில் புதிய நடைமுறை செயல்படுத்தப்படும். இது மட்டுமன்றி, விவசாயிகள் தாம் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்த ஒரு நீர்நிலையிலும் தேவைப்படும் மண்ணை எடுத்துக் கொள்ளவும் இந்த புதிய நடைமுறையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நடைமுறைகளை பயன்படுத்தி வேளாண் பெருமக்கள் அனைவரும் இணைய வழியில் விண்ணப்பம் செய்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அளவிலேயே அனுமதிகளை எளிதில் பெற்று, தாம் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்த ஒரு நீர் நிலையில் இருந்தும் தேவைப்படும் மண்ணை எடுத்து, தமது வயல்களை வளம் பெறச் செய்யலாம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிn இந்த முன்னோடி அறிவிப்பால், வேளாண் பெருமக்கள் அனைவரும் எளிதில் பயன்பெறுவதோடு, மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை உயர்த்தி அதிக மழைநீரைச் சேமித்திடவும் வழிபிறக்கும் என தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உழவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நற்செய்தி... நீர்நிலைகளைத் தூர்வாரி எடுக்கப்படும் மண்ணை, வேளாண் பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் நீங்கள் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்தவொரு நீர்நிலையிலிருந்தும் எடுத்துக்கொள்ளலாம்!. இதற்கான அனுமதியை வட்டாட்சியர்களிடமிருந்து இணைய வழியாகக் கட்டணமின்றிப் பெற்றுக் கொள்ளலாம். மழைநீரைச் சேமிக்கவும் மக்கள் பயன்பெறவும் இத்திட்டம் துணைபுரியும்!.” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்