Skip to main content

“கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது” - ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி விளக்கம்!

Published on 20/01/2025 | Edited on 20/01/2025
Gomiyam has immunity  IIT Director Kamakody explains

சென்னை, மேற்கு மாம்பலத்திலுள்ள கோசாலையில் கடந்த 15ஆம் தேதி (15.01.2025) அன்று மாட்டுப்பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கோமியம் குறித்து அவர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, “கோமியம் சிறந்த மருத்துவ குணத்தைக் கொண்டது. காய்ச்சலைக் குணமாக்கும். பாக்டீரியா பாதிப்பு, பூஞ்சை பாதிப்புகளுக்கு எதிராகக் கோமியம் செயல்படக் கூடியது. மேலும் இது, செரிமான கோளாறு உள்ளிட்ட உடல் பாதிப்புகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது” எனப் பேசியிருந்தார்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடியின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி இன்று (20.01.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கோமியம் குறித்து பேசியது தொடர்பாக விளக்கமளித்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதற்கான 5 ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் ஒரு காப்புரிமை தொடர்பான அறிக்கை என்னிடம் உள்ளது.

பண்டிகையின் போது நான் பஞ்சகவ்யம் உண்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். பஞ்சகவ்யத்தில் மருத்துவ குணங்கள் உள்ளது என்பதற்கான ஆறிவியல் பூர்வமான ஆதாரம் என்னிடம் உள்ளது. அமெரிக்காவில் வெளியான இதழ்களில் பஞ்சகவ்யத்தில் எதிர்ப்புச் சக்தி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கோமியம் தொடர்பாகச் சென்னை ஐ.ஐ.டி.யில் ஆராய்ச்சி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். கோமியத்தைக் குடித்தால் உடல் நலப் பாதிப்பு ஏற்படும் என வெளிவந்துள்ள ஆராய்ச்சி குறித்து நான் படிக்கவில்லை” என விளக்கமளித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்