சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம், விஜயவாடா- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொல்லப்பள்ளி சுங்கச்சாவடியில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியே மூன்று கார்களில் வந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாகப் பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த காரை சோதனையிட்ட போது, 10.77 கிலோ தங்கம் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூபாய் 5.80 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கக் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேரை கைது செய்து, விசாரணை நடத்தினர். இவர்கள் சென்னையில் இருந்து ஆந்திராவில் குண்டூர் மற்றும் ராஜமுந்திரிக்கு தங்கத்தைக் கடத்திச் சென்றது தெரிய வந்துள்ளது.