The gold chain is taken as an black magic; Police looking for old man

'உங்க வீட்டுக்கு உங்க உறவினர்களே செய்வினை வச்சுட்டாங்க. உடனே எடுக்கலனா துர் சம்பவங்கள் நடக்கும், அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படும்' என்று வீட்டு வாசலில் வெள்ளை வேட்டி சட்டையோடு நின்று சொன்ன 70 வயது முதியவர் அந்த வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடும் சம்பவங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடக்கத் தொடங்கியுள்ளது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் காவல் சரகம் மேற்பனைக்காடு பேருந்து நிறுத்தத்தில் டவுன் பஸ்ஸில் இறங்கி மேற்கு நோக்கி நடக்க 100 மீ தூரத்தில் உள்ள ஒரு வீட்டு வாசலில் நின்று 'இந்த வீட்ல செய்வினை இருக்கு. இந்த வீட்டு சொந்தக்காரங்களே செய்வினை வச்சு உங்களை கொல்லப் போறாங்க உடனே எடுக்கனும்' என்று வெள்ளை வேட்டி சட்டையில் வந்த 70 வயது முதியவர் ஒருவர் சொல்லியுள்ளார்.

Advertisment

பயத்தின் உச்சத்திற்கே போன அந்த வீட்டுக்காரர் முதியவரிடம் இறங்கி வந்து பேச, இப்பவே பூஜையை ஆரம்பிக்கனும். 3 நாள் பூஜை செஞ்சு உனக்கு வச்ச செய்வினையை எடுக்கனும். அப்பதான் இந்த குடும்பத்துக்கு நல்லது நடக்கும் என்று முதியவர் சொல்ல அன்றே தொடங்கியது பூஜை. இந்த பூஜை முடிஞ்சு செய்வினை எடுக்கும் வரை யார்கிட்டயும் சொல்லக்கூடாது என்று சத்தியம் வேறு வாங்கிக் கொண்டார்.

3 வது நாள் பூஜை நடக்கும் போது தண்ணீரில் விபூதி என எதையோ போட தண்ணீர் சிவப்பானது. செய்வினை அதிகமா இருக்கு அதுக்கு வேற பரிகாரம் செஞ்சுதான் எடுக்கனும் வீட்டில் இருந்து 7 புடவைகளை எடுத்து நான் சொல்லச் சொல்ல ஒவ்வொன்னா மடித்து அடுக்கி வைங்க என்று சொல்லிக் கொண்டே போனவர், ஒரு கட்டத்தில் தங்கச் சங்கிலியை அந்த புடவைக்குள் வச்சு கட்டுங்க என்று சொல்லியுள்ளார். சொன்னதை அப்படியே செய்துள்ளனர். 3 நாளைக்கு இந்த புடவை கட்டை அவிழ்க்க கூடாது.

Advertisment

இப்ப இந்த துண்டை இடுப்பில் கட்டுங்க என்று ஒரு துண்டு கொடுக்க, அந்த துண்டில் நெருப்பு தீ எரிய அய்யய்யோ செய்வினையின் வேகம் இன்னும் அதிகமாகுது இந்த துண்டை அவிழ்த்து விடாதீங்க இப்பவே கீரமங்கலம் சிவன் கோவில் போய் சிவனை வழிபட்டு ஒரு பூஜை பண்ணனும் அப்பதான் எல்லாம் சரியாகும். நீங்க சிவன் கோயில் போங்க நான் வேற ஒரு இடத்துக்கு போயிட்டு அங்கே வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு சென்ற முதியவர் பல நாட்களாக காணவில்லை.

3 நாட்கள் கழித்து புடவை கட்டை அவிழ்த்து பார்க்க உள்ளே வைத்த 3 பவுன் தங்கச் சங்கிலியையும் காணவில்லை. மாறாக ஒரு கல் மட்டும் இருந்தது. அதன் பிறகே தான் முதியவரால் ஏமாற்றப்பட்டது தெரிய வந்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பார்க்க முதியவரின் படம் பதிவாகி உள்ளது. இதே ஊரில் புதுக்குடியிருப்பு பகுதிக்கும் அந்த முதியவர் சென்றுள்ளார். கடந்த மாதம் இதே முதியவர் அன்னவாசல் பகுதியில் ஒரு குடும்பத்தை ஏமாற்றி நகைகளை திருடிக் கொண்டு சென்றதும் தெரியவந்துள்ளது.

எல்லா ஊரிலும் சிசிடிவி கேமராவில் அந்த முதியவரின் உருவம் பதிவாகி இருந்தாலும் கூட இதுவரை அவரை அடையாளம் கண்டு கைது செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர் புதுக்கோட்டை போலீசார். எவ்வளவோ அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும் கூட இன்னும் பில்லி, சூனியம், செய்வினை என்று மக்கள் ஏமாறுவதும் குறையவில்லை. இதனை முதியவர்கள் கூட பயன்படுத்தி ஆட்டையை போடுகிறார்கள்.