Skip to main content

சிறப்பு விமானங்களில் தங்கம் கடத்தல்..! சுங்க இலாகாவின் அதிரடி வேட்டை..!

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

Gold caught at Chennai air port

 

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள தங்கத்தை மீட்டிருக்கிறார்கள் சுங்க இலாகா அதிகாரிகள். துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளிலிருந்து தமிழகத்துக்கு தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கடந்த சில மாதங்களாகவே சுங்க இலாகாவுக்கு தகவல் கிடைத்தபடி இருந்தது. இதனையடுத்து அரபு நாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் பன்னாட்டு சிறப்பு விமானங்களில் பயணிக்கும் பயணிகளை சுங்க இலாகா கண்காணித்தபடி இருந்தது.

 

அந்த வகையில், துபாயிலிருந்து வந்த இண்டிகோ 6E-66 விமானத்தை நேற்று முன்தினம் (18.04.2021) சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது விமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ எடையுள்ள  தங்கம்  கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு 48 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய். மேலும், கனமாக பேக்கிங்க் செய்யப்பட்ட பார்சல் ஒன்று விமான நிலைய கழிவறையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து வட்ட வடிவிலான 356 கிராம் எடையுள்ள தங்க ப்ளேட்டுகளைக் கைப்பற்றினர். இதன் மதிப்பு 17 லட்சத்து 1 ஆயிரம் ரூபாய். நேற்று முன்தினம் மட்டும் விமானம் மற்றும் விமான நிலைய கழிவறையிலிருந்து 1.35 கிலோ எடையுள்ள 65 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கைப்பற்றியிருக்கிறது சென்னை விமான நிலைய சுங்க இலாகா.

 

கரோனா நெருக்கடிகளால் அரபு நாடுகளிலிருந்து இந்திய பயணிகளை அழைத்து வர மீட்பு விமானம் அல்லது சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் மட்டும் அரபு நாடுகளிலிருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்துள்ள விமானங்களின் எண்ணிக்கை 20. இதில் 5 விமானங்கள் துபாயிலிருந்து வந்துள்ளன.

 

பெயர்தான் சிறப்பு விமானங்கள். ஆனால், பெரும்பாலும் தங்க கடத்தலுக்காக மட்டுமே விமான சேவை பயன்படுத்தப்படுவதாக சென்னை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு 65 லட்சம் ரூபாய். ஆனால், பிடிபடாமல் தமிழகத்துக்குள் சென்றுவிட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு பல கோடிகள் இருக்கும் என்கின்றனர். தென்னிந்தியாவில் கேரளாவையும் மிஞ்சும் அளவுக்கு தங்க கடத்தல் நடப்பது சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில்தான் என்கிற தகவலும் பரபரப்பாக எதிரொலிக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விமான கட்டணம் கிடுகிடு உயர்வு; பயணிகள் கடும் அதிர்ச்சி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Air fares hike Passengers shocked

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் வார விடுமுறை காரணமாகப் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாகப் பேருந்துகள், ரயில்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் சேலம் செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமான கட்டணத்தை விட 3 முதல் 5 மடங்கு வரை விமான டிக்கெட் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. இதனால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த வகையில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 957 ரூபாயாக இருந்த விமான கட்டணம் தற்போது 12 ஆயிரத்து 716 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 674 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 555 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக 11 ஆயிரத்து 531 ரூபாயாக உள்ளது. மேலும் சென்னையிலிருந்து சேலம் செல்ல வழக்கமாக 2 ஆயிரத்து 433 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 5 ஆயிரத்து 572 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 342 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 616 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

Next Story

சென்னையில் கடும் புகைமூட்டம்; 50 விமான சேவை பாதிப்பு

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
50 flight services affected in Chennai due to heavy smog
கோப்புப்படம்

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற முதுமொழிக்கு ஏற்ப தமிழ்நாடு முழுவதும் இன்று போகி கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட உள்ளது. 

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருவிழாவின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது போகி. கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை ஜனவரி 13 அல்லது 14 ஆம் நாளில் கொண்டாடப்படும்.  அந்த வகையில் தைப் பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் போகி கொண்டாடப்படுகிறது. 

சென்னையில் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து உற்சாகமாக மேள தாளங்களை முழங்கிக் கொண்டு பழைய பொருட்களைத் தீயிட்டு வருகின்றனர். இதனிடையே டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை எரிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. ஆனால் சில இடங்களில் அது மீறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டு காற்று மாசு அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் கடும் புகை மூட்டம் காரணமாகச் சென்னையில் 50 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து அந்தமான், புனே, மும்பை, டெல்லி, தூத்துக்குடி, ஐதராபாத், மதுரை செல்ல வேண்டிய விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 21 விமானங்கள் புறப்படுவதிலும், 21 விமானங்கள் சென்னைக்கு வருவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் செல்ல வேண்டிய விமானம் புகை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் தரையிறங்கவிருந்த சிங்கப்பூர், லண்டன், இலங்கை, டெல்லி ஆகிய இடங்களிலிருந்து வந்த விமானங்கள் புகை மூட்டம் காரணமாக ஐதராபாத்திற்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது.