'காட்மேன்' இணையத்தள தொடரை இயக்கிய பாபு யோகேஸ்வரனுக்கும், தயாரிப்பாளர் இளங்கோவுக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜீ 5 என்ற யூ டியூப் சேனலில், காட்மேன் என்ற இணையத்தள தொடரின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது, பிராமணர்களின் மத ரீதியிலான உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், காட்மேன் தொடர் தயாரிப்பு நிறுவன பிரதிநிதி இளங்கோ, இயக்குனர் பாபு யோகேஸ்வரன் ஆகியோர் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை, முதன்மை அமர்வு நீதிமன்ற பொறுப்பு நீதிபதியும், முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியுமான செந்தில் குமார் விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எந்தக் குறிப்பிட்ட சமுதாயத்தினரையும், நம்பிக்கையையும் குலைக்கும் வகையில் இந்தத் தொடர் எடுக்கப்படவில்லை எனவும், சமுதாயத்தில் சாமியார் எனக் கூறிக் கொண்டு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைப் பற்றியே இத்தொடர் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
மேலும், குறிப்பிட்ட அந்த டீஸர் இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசுத் தரப்பில் ஆஜரான மாநகர குற்றவியல் வழக்கறிஞர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், இருவரும் முன் ஜாமீன் கோரியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில் குமார், இந்த வழக்கில் டீஸரின் வீடியோ பதிவு ஏற்கனவே காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இணையத்தளத்தில் இருந்து டீஸர் நீக்கப்பட்டுள்ளது என்பதால், இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் மன்றத்தில், 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளும்படி உத்தரவிட்ட நீதிபதி, விசாரணைக்குத் தேவைப்படும் பட்சத்தில் புலன் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் எனவும், சாட்சிகளையும், ஆதாரங்களையும் கலைக்கக் கூடாது எனவும், தலைமறைவாகக் கூடாது எனவும் நிபந்தனை விதித்தார்.
கருத்துகள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமே தவிர, வெறுப்புணர்வை ஏற்படுத்தக் கூடாது என நீதிபதி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.