Skip to main content

'தோடர்' இனத்தின் முதல் பெண் வக்கீல்! - கொண்டாட்டத்தில் கிராமத்தினர்!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

a girl from nilgiri who completed law first
                                                             நந்தினி

 

பழங்குடி சமூகமான தோடர் இனத்திலிருந்து முதன்முறையாக ஒரு இளம் பெண் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞர் ஆகியிருக்கிறார். இந்தச் சம்பவம் தோடர் இனத்துக்கே பெருமை சேர்த்துள்ளதாக அவரது கிராமமே கொண்டாடி மகிழ்கிறது. தென்னிந்தியாவின் பழங்குடி இனங்களில் மிக முக்கியமானது தோடர் இனம். இவர்களுக்கென பிரத்தியேகமான மொழி உண்டு.

 

ஆனால், அந்த மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. அதனால் இந்தியாவில் அழிந்து வரும் மொழிகளில் தோடர் இன மொழியும் இருப்பதால், அதனைப் பாதுகாக்க வேண்டும் என இந்திய அரசுக்குத் தொடர்ச்சியான வலியுறுத்தல்களை செய்துவருகிறது ஐ.நா.சபை. இந்த வலியுறுத்தலின் பேரில், தொடர்ந்து அழிந்து வரும் மொழிகளைப் பாதுகாக்கவும் அவைகளை ஆவணப்படுத்தவும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

 

தமிழகத்தில் நீலகிரி மலைப்பிரதேசத்தில் சுமார் 8,000-த்திற்கும் அதிகமான தோடர் இனப் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் அந்த இன மக்களின் குழந்தைகள் சமீபகாலமாக கல்வி அறிவு பெறுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நீலகிரி மாவட்டம் தவிட்டுக்கோடு மந்து கிராமத்தைச் சேர்ந்த நந்தினி என்கிற இளம்பெண் முதன்முறையாக சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞர் ஆகியிருக்கிறார்.

 

சென்னையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த நந்தினி, சென்னை பார் கவுன்சிலில் வழக்கறிஞர் பயிற்சி பெற பதிவு செய்திருக்கிறார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மந்து கிராமப் பகுதியில் உள்ள தோடர் இனத்தினர் நந்தினியை கொண்டாடி மகிழ்கின்றனர். இதனை அறிந்து, ‘விடா முயற்சியுடனும் கடுமை உழைப்புடனும் சட்டப்படிப்பை முடித்திருக்கும் தோடர் இனத்தின் முதல் பெண் வழக்கறிஞருக்கு வாழ்த்துகள்’ என நந்தினியை வாழ்த்தியுள்ளார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

 

மேலும், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து வாழ்த்துகளையும் பெற்றுள்ளார் நந்தினி. இது குறித்துப் பேசிய நந்தினி, “அரசு உதவி பெறும் பள்ளியில் தான் பள்ளிக்கூட படிப்பை முடித்தேன். வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது எனது விருப்பம். அதன்படி, சட்டப்படிப்பை சென்னையில் முடித்தேன். தோடர் இனத்தில் முதல் முறையாக சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞர் பணியில் சேர்வது நான்தான். வக்கீல் பணியில் சமூகத்திற்கு நல்லது செய்வேன்” என்று கூறுகிறார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு;  முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
CM MK Stalin obituary for Boy drowned in river incident 

நீலகிரி மாவட்டம் சேரங்கோடு கிராமம் பாலவயல் பகுதியிலுள்ள பொன்னானி ஆற்றில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும்,  அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் நெல்லியாளம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் குணசேகரன் (வயது 18). இவர் நேற்று (20.07.2024) பிற்பகல் 01.30 மணியளவில் சேரங்கோடு கிராமம் பாலவயல் பகுதியிலுள்ள பொன்னானி ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

கணவனின் திருமணத்தை மீறிய உறவைக் கண்டித்த மனைவி; அடுத்து நடந்த சோகம்!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
A wife who condemned her husband's adulterous relationship

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவர் எலெஜ்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், மணிகண்டனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில், திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இந்த விவகாரம், மணிகண்டனின் குடும்பத்துக்கு தெரியவர, தனது பெண் தோழியோடு எடப்பாடி அருகே வளையசெட்டியூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இதனிடையே, தனது கணவர் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டனின் மனைவி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். 

பின்னர், மணிகண்டன் வளையசெட்டியூர் பகுதியில் இருப்பதை அறிந்த அவரது மனைவி அந்த இடத்துக்கு சென்று மணிகண்டனின் தகாத உறவைக் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் தன்னோடு வரும்படி அழைத்துள்ளார். இதில் கோபமடைந்த மணிகண்டன் வீட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள மதுபானக் கடை அருகில் விஷம் குடித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள், மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் வைத்திருந்த தகாத உறவை மனைவி கண்டித்ததால், எலெக்ட்ரீசியன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.