Skip to main content

கௌதமி புகார்; முக்கிய நபர் கைது!  

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

Gautami complains; balaraman  arrested!

 

பிரபல திரைப்பட நடிகை கவுதமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 11/09/2023 அன்று புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், 'தனக்கு சொந்தமான சொத்துக்களை அழகப்பன் என்பவரும் அவரது மனைவியும் சேர்ந்து மோசடி செய்துள்ளனர். எனது உடல்நிலை மோசமான நிலையில் திரைப்படங்களில் தான் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. என்னுடைய நான்கு வயது மகளுக்காக சினிமா துறையில், தான் சேர்த்து வைத்த சொத்துக்களை ஒன்றிணைத்து மகளின் பெயரில் மாற்ற முடிவு செய்தேன். அதற்காக சொத்துக்களை வாங்கி விற்க அழகப்பன் என்பவரை அணுகினேன்.

 

அவ்வாறு அணுகும்போது தமிழகம் மட்டுமல்ல மற்ற பகுதியில் இருக்கக்கூடிய சொத்துக்களை ஒன்றிணைக்கவும் அவற்றை ஒரே இடத்தில் மகளின் பெயருக்கு மாற்றவும் உதவியை நாடினேன். ஆனால் அழகப்பன் தன்னை நம்ப வைத்து மோசடி செய்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் அருகே 25 கோடி ரூபாய் மதிப்புடைய நிலம் தனக்கு உள்ளது. மற்ற எல்லாவற்றையும் விட என்னுடைய மகளின் கல்வி, உடல் மற்றும் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 10 லட்சம் ரூபாய் சொத்துக்களை அவர் ஏமாற்றியுள்ளார். தொடர்ந்து தன்னையும் தனது மகளையும் அழகப்பன் மிரட்டி வருகிறார்' எனத் தெரிவித்திருந்தார்.

 

அதேபோல், திருவள்ளூர் மாவட்டம், கோட்டையூரில் உள்ள எனக்குச் சொந்தமான 8.63 ஏக்கர் நிலத்தை விற்க முடிவு செய்தேன். இதற்கு உதவி செய்வதாக அழகப்பன் கூறிய நிலையில், பிறகு சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பலராமன், செங்கல்பட்டைச் சேர்ந்த ரகுநாதன் ஆகிய ரியல் எஸ்டேட் தரகர்கள் அறிமுகமாகினர். அவர்களை என் நிலத்தை விற்க பவர் ஏஜெண்டுகளாக நியமித்தேன். அவர்கள் அந்த நிலத்தை ரூ. 11 கோடிக்கு விற்றுவிட்டு, என்னிடம் ரூ. 4 கோடிக்கு விற்றதாக தெரிவித்தனர். இதில் ரூ. 7 கோடி வரை மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை கௌதமி புகார் கூறியிருந்தார். 

 

Gautami complains; balaraman  arrested!
அழகப்பன் வீடு

 

அண்மையில் பாஜகவில் தீவிர செயல்பாட்டாளராக இருந்த கவுதமி திடீரென கட்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி, காரைக்குடியில் உள்ள அழகப்பன் வீட்டில் வட்டாட்சியர் முன்னிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்தச் சோதனையில், நிலப் பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்ததோடு, 11 அறைகளில் இருந்த ஆவணங்களுக்கு சீல் வைத்துச் சென்றனர்.

 

அழகப்பன் வீட்டில் கிடைத்த ஆவணங்களை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைமறைவாக இருக்கும் அழகப்பன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை பிடிப்பதற்கு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.  

 

Gautami complains; balaraman  arrested!
பலராமன்

 

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், கோட்டையூர் நில வழக்கில் தொடர்புடைய ரியல் எஸ்டேட் தரகர் பலராமன்(64) என்பவரைப் போலீஸார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்