Skip to main content

“கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்” - வி.ஏ.ஓவின் நேர்மை பக்கங்கள்!

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

  gang of sand smugglers incident VAO in Tuticorin

 

ஏப் 25 மதியம் 12.30 மணி வாக்கில் தனது அலுவலகத்திலிருந்திருக்கிறார் தூத்துக்குடி மாவட்டத்தின் முறப்பநாடு கிராமத்தின் கிராம நிர்வாக அதிகாரியான லூர்து பிரான்சிஸ். மதிய வேலைகளை முடித்து விட்டு உணவுக்காக கிளம்புகிற நேரத்தில் பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரண்டு பேர் தனியாக இருந்த வி.ஏ.ஓ.வின் அலுவலகத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள்.

 

வந்தவர்களை வி.ஏ.ஓ. ஏறிட்டுப் பார்ப்பதற்கு முன்னரே அரிவாட்களை ஓங்கியவர்கள் வி.ஏ.ஓ.வை வெட்ட முற்பட்ட போது அரண்டு போன வி.ஏ.ஓ.தன்கைகளால் தடுத்திருக்கிறார். ஆனால் வெட்டு சரமாரியாக அவரின் கைகளில் விழுந்திருக்கிறது. அலறிய லூர்து பிரான்சிஸ் உயிர் தப்பிக்க முயன்ற போது வளைத்த கொலை வெறியர்கள், அவரின் தலையிலும் தோள்களிலும் வெட்டியிருக்கிறார்கள். ரத்தச் சகதியில் அலறிக் கொண்டு வீதிக்கு ஓடி வந்த வி.ஏ.ஓ.வினால் மேற்கொண்டு நகரமுடியாமல் மயங்கிச் சரிந்திருக்கிறார். ரத்த வெள்ளத்தில் புரண்டு கொண்டிருந்த வி.ஏ.ஓ.வை பார்த்து, எப்டிடா எம்மேல புகார் குடுப்ப என்று வந்தவர்களில் ஒருவர் கர்ஜித்து விட்டுத் தப்பியிருக்கிறார்கள்.

 

அலுவலகத்தின் முன்பாக கதறிக் கொண்டிருந்த வி.ஏ.ஓ.வின் பயங்கரம் கண்ட அக்கம் பக்கத்தவர்கள் முறப்பநாடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க, சம்பவ இடம் வந்த ரூரல் டி.எஸ்.பி. (பொறுப்பு) சத்யராஜ், இன்ஸ்பெக்டர் ஜமால் உள்ளிட்ட போலீசார் வி.ஏ.ஓ.வை மீட்டு உடனடியாக அருகிலுள்ள பாளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். தகவல் போய் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட எஸ்.பி.யான பாலாஜி சரவணன் சூழலை ஆய்வு செய்தவர் ஸ்பாட் விசாரணை நடந்தியதுடன் காரணமான கொலையாளிகளைப் பிடிக்குமாறு அனைத்து விசாரணை யூனிட்களையும் விரைவுபடுத்தியிருக்கிறார்.

 

இதனிடையே மருத்துவமனை சிகிச்சையிலிருந்த வி.ஏ.ஓ. சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்திருக்கிறார். அங்கு வந்த மாவட்டக் கலெக்டரான செந்தில்ராஜ் மற்றும் எஸ்.பி.யான பாலாஜி சரவணன் வி.ஏ.ஓ.வின் நிலை கண்டு கண்கலங்கியிருக்கிறார்கள். இதற்குள் தகவல் தீயாய் பரவிய நேரத்தில் வி.ஏ.ஓ. பயங்கரமான வகையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் கொதித்துப் போன வருவாய்துறை ஊழியர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். தென் மாவட்டமே பற்றிக் கொண்ட சூழல்.

 

அலுவலகப் பணியிலிருந்த அரசு அதிகாரி பட்டப்பகலில் படுகொலைக்குள்ளான காரணம் குறித்து நாம் பரவலாக தகவல் திரட்டிய போது, மணல் மாஃபியாக்களின் பழிவெறியும், மணல் கடத்தலில் குறுக்கிடுவதுமே பிரதானமான வன்மம் என்பது பட்டவர்த்தனமாகவே வெளிப்பட்டது. இதனிடையே கொலை தொடர்பாக ஒருவரான ராமசுப்பிரமணியன் என்பவரை உடனடியாகப் போலீசார் வளைத்திருக்கிறார்கள்.

 

தூத்துக்குடி மாவட்டத்தின் தங்கச் சுரங்கமான கனிம வளங்களைக் கொண்ட பல பகுதிகளில் முதன்மையானது பரணியாறு ஒடும் கரையோரமான முறப்பநாடு. அந்தப் பகுதியும் அருகிலுள்ள கலியாவூர் கிராமத்தின் இரண்டு எல்லைகளும் சந்திக்கிற இடத்தில் தாமிரபரணியின் மணற்குவியலைக் கொண்ட அள்ள அள்ளக் குறையாத தங்கச்சுரங்கம் தான். அதன் காரணமாகவே அந்தப் பகுதியில் திருட்டு மணல் கடத்தவதும் மாஃபியாக்களின் அட்ராசிட்டியும் தொடர் சம்பவமாகியிருக்கிறது. ஆனாலும் முறப்பநாடு மணல் கொள்ளை என்பது ஆழமாக வேரூன்றிப்போன விஷயம். எத்தகைய கடிவாளத்திற்கும் கட்டுப்படாத மணல் மாஃபியா உலகம். தங்களின் நோக்கம் நிறைவேறுவதற்காக மாஃபியாக்கள் எந்த எல்லையையும் தாண்டுவார்கள் என்கிறார்கள்.

 

இந்தச் சமயத்தில் தான் ஆதிச்சநல்லூரில் வி.ஏ.ஓ.வாகப் பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் கடந்த ஒன்றைரை வருடங்களுக்கு முன்பு பணிமாறுதலாகி முறப்பநாடு கிராமத்திற்கு வந்திருக்கிறார். பணியில் நேர்மை, கடமை தவறாதவர். விசுவாசமான பணியாளரான லூர்து பிரான்சிஸ் தரப்பட்ட பணியினை பழுதின்றி செய்பவர். அவர் பணியிலிருந்த காலத்தில் சட்டத்திற்குப் புறம்பான எந்த ஒரு காரியத்தையும் அனுமதித்ததில்லை என்கிறார்கள். மணற் கொள்ளையோ, ஆக்கிரமிப்போ எதுவானாலும் கண்டிப்பாக நடந்து கொள்கிற லூர்து பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலியாவூர் பகுதியின் ராமசுப்பிரமணியன் என்பவர் மணல் கடத்தும் போது விரட்டியிருக்கிறார் ஆனால் அவர் தப்பியோடியிருக்கிறார்.

 

ஆனாலும் விடாத வி.ஏ.ஓ. முறைப்படி ராமசுப்பிரமணியன் மீது முறப்பநாடு காவல் நிலையத்தில் கடந்த 13ம் தேதி நடந்தவைகளை மாறாமல் புகார் தர அதன்படி முறப்பநாடு போலீசார் ராமசுப்பிரமணியன் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்திருக்கிறார்கள். இந்த பக்கா எப்.ஐ.ஆர். தன் மீது பதியப்பட்டதால் வி.ஏ.ஓ. மீது கடுமையான ஆத்திரம் வன்மத்திலிருந்திருக்கிறார் ராமசுப்பிரமணியன். மேலும் ராமசுப்பிரமணியன் ஏற்கனவே திருட்டு மணல் பிசினஸில் இருப்பவர். அதையே தொழிலாகக் கொண்டவராம். அவர் மீது மணல் கடத்தல் உள்ளிட்ட பிற வழக்குகள் என்று முறப்பநாடு, சிவந்திபட்டி, தூத்துக்குடி ஆகிய காவல் நிலையங்களில் சுமார் 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்கிறார்கள் மாவட்ட காவல் கண்காணிப்பக அதிகாரிகள்.

 

இதனிடையே மணல் புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவர, இதற்கு காரணமான வி.ஏ.ஓ. மீது கடும் ஆத்திரத்திலிருந்திருக்கிறார் ராமசுப்பிரமணியன். இந்தச் சூழலில் தான் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் தனியாக இருந்ததை நோட்டமிட்டுக் கொலைச் சம்பவம் நடந்தேறி இருக்கிறது என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள். மாவட்டக் கலெக்டரான செந்தில் ராஜ் கூறுகையில், “வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் பணியில் நேர்மையானவர். அரசாங்க சொத்துக்களுக்கு எந்த பங்கமும் வராமல் பார்த்துக் கொள்பவர். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தான் அங்கு பணிமாறுதலாகி வந்தவர். கைகளிலும் தலையின் பல இடங்களிலும் வெட்டியிருக்கிறார்கள். ரொம்பவும் வேதனையாயிருக்கு” என்றார் உடைந்த குரலில். முதல்வர் ஸ்டாலின் வி.ஏ.ஓ.வின் குடும்பத்திற்கு ஒரு கோடி நிதி உதவியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கியும் உத்தரவிட்டவர் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்திருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆவடி கொள்ளை சம்பவம்; வெளியான புதிய தகவல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
avadi jewelry incident New information released 

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு நேற்று (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார். 

avadi jewelry incident New information released 

இந்நிலையில் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களின் காரை பின் தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் இன்று (16.04.2024) மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.