Skip to main content

முழு உடல்கவசங்கள் வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு! -முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!

Published on 14/05/2020 | Edited on 14/05/2020

 

chennai high court


கரோனா தொற்று பரவி வரும் நிலையில், தொற்று பாதித்தவர்களுக்குச் சி்கிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியில் உள்ள காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முழு உடல் கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 

இந்த வழக்கு  நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் செல்வக்குமாரின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் அவர்களுடைய பணிக்கு ஏற்றாற்போல் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. பணியாற்றும் அனைவரின் பாதுகாப்புக்காக, அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள 14 நாட்கள் வழங்கப்படுகிறது.  மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளின்படி கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்படுகிறது.  
 

மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்புக்காக  பி.பி.ஈ.  கிட்,  கையுறைகள், முகக்கவசம் வாங்குவதில் தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. தற்போது போதுமான உபகரணங்கள் இருப்பு உள்ளன. தமிழக அரசின் இந்தச் செயல்பாடுகளையும் மீறி கரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்களுக்குத் தொற்று ஏற்பட்டது எதிர்பாராதது. இதை வைத்து மருத்துவ நிர்வாகம் இரக்கமற்ற முறையில் செயல்பட்டதாகக் கருத முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


‘தமிழக அரசின் இந்த அறிக்கை முழுமையாக இல்லை.  ஆகவே,  முழுமையான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்..’ எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை  மே 18- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Tamil Nadu government case against central government

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்கவில்லை. இதனையடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த்தையும், திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூஸையும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டினையும் ஆதரித்து நாங்குநேரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 25 ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார்.

Tamil Nadu government case against central government

அப்போது அவர் பேசுகையில், “இரண்டு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்ட போதும் தமிழகத்திற்கு ஒரு காசு கூட பிரதமர் மோடி தரவில்லை. பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. வெள்ள நிவாரணத்திற்கு நிதி கேட்டால் பிச்சை என்று ஏளனம் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி தராத மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

Tamil Nadu government case against central government

இந்நிலையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமனன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.