![Frustration at being deprived of a position; tvk administrator attempted - excitement in Vathalakund!](http://image.nakkheeran.in/cdn/farfuture/KHKUFLZXmacAQI5bIs_KUoeg83oaHZ7ZYi5R8Oo48YY/1733850159/sites/default/files/inline-images/a1806_0.jpg)
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வத்தலக்குண்டு அருகே எழில் நகரைச் சேர்ந்தவர் அபினேஷ். இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் வத்தலக்குண்டு ஒன்றிய தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வத்தலகுண்டு பேருந்து நிலையம் முன்பு புதிதாக அமைக்கப்பட்ட கொடி மேடை கல்வெட்டில் வத்தலக்குண்டு ஒன்றியத்திற்கு புதிய நிர்வாகிகள் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அபினேஷ் உள்ளிட்ட தவெக கட்சியினர் 30க்கும் மேற்பட்டோர் கொடியேற்று விழா தினத்தன்று புதியவர்களுக்கு பதவி வழங்கிய மாவட்ட தலைவர் தேவாவை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் பதவி பறிக்கப்பட்டதாக எண்ணிய அபினேஷ் மனஉளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரை உடனடியாக மீட்ட பெற்றோர்கள் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வத்தலக்குண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.