Skip to main content

இந்து அறநிலையத்துறை சார்பில் 20 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

Free marriage for 20 couples in Trichy on behalf of Hindu Charity Department

 

தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை சார்பில் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஜோடிகளுக்கு சமயபுரம் கோயிலில் டிசம்பர் 4 ஆம் தேதி இலவச திருமணங்கள் நடைபெறவுள்ளன.


ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில்களில் இலவச திருமணங்கள் நடத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அவற்றுக்கான செலவுகளையும் திருக்கோயில்கள் நிர்வாகமே ஏற்கும் என, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். அதன்படி, ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஜோடிகள் வீதம் மாநிலம் முழுவதும் உள்ள 20 இணை ஆணையர் மண்டலங்களில் 500 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு டிசம்பர் 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து இணை ஆணையர் மண்டலங்களிலும் திருமணங்கள் நடைபெறவுள்ளன. 

 

சென்னை இணைய ஆணையர் மண்டலத்துக்கு உட்பட்டோருக்கான திருமண நிகழ்வு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. அந்த வகையில் திருச்சி இணை ஆணையர் மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஜோடிகளுக்கு திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

 

இதில் அமைச்சர்கள், ஆட்சியர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர். மணமக்களுக்கு சீர்வரிசைப் பொருட்களும், மணவிழாவில் பங்கேற்கும் உறவினர்கள் சுமார் 500 பேருக்கு முதல்நாள் இரவும் மணநாளன்று காலையிலும் சிற்றுண்டியும், திருமணத்துக்குப் பின்னர் பகல் உணவும் வழங்கப்படவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார்.