Skip to main content

கைது முதல் இறப்பு வரை; சாந்தன் கடந்து வந்த பாதை

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Rajiv case; The path passed by Shantan

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலை ஆகியிருந்த ஏழு பேரில், சாந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், சாந்தனும் விடுதலை பெற்றிருந்தார். தொடர்ந்து அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்துள்ளது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சாந்தன் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 30 வருடம் சிறையில் இருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் 7 பேரையும் விடுதலை செய்திருந்தது. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அகதிகள் முகாமில் சிறப்பு வசதிகள் ஏதுமில்லை, நடைப்பயிற்சி செய்ய முடியவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சாந்தன் தரப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அவர் தற்போது உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து சாந்தனின் வழக்கறிஞர் புகழேந்தி குறிப்பிடுகையில், ''ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்ட பின்னரும் அவர் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். இலங்கைக்கு அனுப்புவோம் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேலாகியும் அனுப்பப்படவில்லை. இந்நிலையில் முகாமில் சரியான வசதிகள் இல்லாததாலும், மருத்துவ வசதி இல்லாததாலும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஒரு மாதமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணம் அடைந்துள்ளார். இன்று இரவு அவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் இலங்கைக்கு செல்வதாக இருந்தது. இதற்கிடையில் இவர் உயிரிழந்துள்ளார்'' என்றார்.

nn

1991 மே 21 ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்ட நிலையில், 1991 ஜூலை 22 ஆம் தேதி சாந்தன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 26 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 1998 ஜனவரி 28 ஆம் தேதி, 26 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கியது பூந்தமல்லி தடா நீதிமன்றம்.

அதனைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு மே 11 தேதி 26 பேரில் 19 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு தூக்கு உறுதி செய்யப்பட்டது. 1999 அக்டோபர் 8 ஆம் தேதி தூக்கு தண்டனையை குறைக்கக் கோரிய சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 1999 அக்டோபர் 10ஆம் தேதி நால்வரும் ஆளுநருக்கு கருணை மனு அனுப்பினர். 1999 அக்டோபர் 29ஆம் தேதி அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார்.

1999 நவம்பர் 25 ஆம் தேதி ஆளுநரின் உத்தரவை ரத்து செய்து அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவு கொடுக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. ஆனால் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படவில்லை.

2000 ஏப்ரல் 26ஆம் தேதி பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். குடியரசுத் தலவர்களாக இருந்த கே.ஆர்.நாராயணன் அவருக்குப் பிறகு வந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆகியோர் கருணை மனுக்களின் மீது முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டனர். அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல் 2011 ஆகஸ்ட் 12ஆம் தேதி கருணை மனுக்களை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டார். அதன் விளைவாக தமிழ்நாட்டில் அதனைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்தது.  

nn

பின்னர் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மூவரும் சேர்ந்து, தாங்கள் அதிக வருடங்கள் சிறையில் கழித்துவிட்டோம் என்று, தூக்கு தண்டனையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் 2014 பிப்ரவரி 18ஆம் தேதி பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.

2014 பிப்ரவரி 19ஆம் தேதி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய கைதிகள் விடுதலை என ஜெயலலிதா அறிவித்திருந்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி சிபிஐ விசாரித்த வழக்குகளில் எடுக்கும் முடிவை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று கூறி, மத்திய அரசுக்கு தெரிவித்த போது, அப்போது இருந்த காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி விடுதலைக்குத் தடை பெற்றது. பின்னர் நடைபெற்ற அந்த வழக்கில், 2015 டிசம்பர் 2 மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அவர்களை விடுவிக்க முடியாது என நீதிபதி இப்ராஹீம் கலிபுல்லா அமர்வு தீர்ப்பளித்தது.

2016 மார்ச் 2 ஆம் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. 2018 மார்ச் 6, 7 பேரை விடுவிப்பு தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கலாம் என ரஞ்சன் கோகாய் அமர்வு தீர்ப்பளித்தது. 2018 டிசம்பர் 6ஆம் தேதி 161 சட்ட விதிப்படி ஆளுநர் இறுதி முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அதிகாரம் வழங்கியது.

அதனைத் தொடர்ந்து பேரறிவாளன் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும் அவர்களில் பேரறிவாளனைத் தவிர மற்றவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். வரலாற்றில் இடம்பிடித்த துயர சம்பவமான ராஜீவ் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட 7 பேரில், சாந்தன் சொந்த நாடு திரும்பாமலேயே உயிரிழந்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

மூவரை இலங்கைக்கு அனுப்ப... தயாராக தமிழக அரசு; ஒன்றிய அரசு முடிவு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Tamil Nadu Govt says Ready to send 3 Tamils ​​to Sri Lanka at Rajiv Gandhi case

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், சாந்தனும் விடுதலை பெற்றிருந்தார். தொடர்ந்து அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி உயிரிழந்தார்.

சாந்தன் உயிருடன் இருக்கும் போது, நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அமர்வு முன் வந்தது. அதில், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகினார்.

அப்போது, சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி எப்போது கிடைத்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், ‘கடந்த 22ஆம் தேதி சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறினார். இதனையடுத்து, ‘சாந்தனை இலங்கைக்கு அனுப்ப 22ஆம் தேதியே மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன் அவரை அனுப்பவில்லை’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனியப்பராஜ், ‘சாந்தனை இலங்கைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்ப தயாராக இருந்த நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவ ரீதியாக உடல் ஒத்துழைக்கவில்லை’ என்று பதில் அளித்தார். இதனையடுத்து, சாந்தனின் உடல்  இலங்கைக்கு கொண்டு செல்ல அனைத்து உதவிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான நோடல் அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (04-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, மறைந்த சாந்தனின் உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான விவரங்களையும் தாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைக்க உத்தரவிடுவதாக கூறினார். அப்போது, குறுக்கிட்ட வழக்கறிஞர் முனியப்பராஜ், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் திருச்சி சிறப்பு முகாமில் இருக்கின்றனர். அவர்கள் தங்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்து உள்ளனர். 

அவர்கள் மூவரையும் இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசு தயாராக இருக்கிறது. எனவே, அவர்களை இலங்கை அனுப்புவதற்கான அனுமதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.  இதனை கேட்ட நீதிபதி, ‘இந்த வழக்கில் மூன்று பேர் தொடர்பான எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. ஆனால், அதே நேரத்தில், அவர்கள் மூன்றும் பேரும் தனித் தனியாக மனுத்தாக்கல் செய்தால் அந்த மனு பரிசீலிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.