Former MP who attacked SI-sued in 2 sections!

சேலத்தில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரை (எஸ்எஸ்ஐ) தாக்கிய முன்னாள் எம்பி அர்ஜூனன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடந்து வருகிறது.

Advertisment

சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (77). முன்னாள் எம்பி, எம்எல்ஏ ஆக இருந்துள்ளார். தற்போது திமுக, அதிமுக, தேமுதிக கட்சிகளுக்குச் சென்ற அவர் கடைசியாக மீண்டும் அதிமுகவிலேயே தஞ்சம் அடைந்தார். எனினும், அவர் கட்சியின் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்து வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) மேச்சேரி அருகே உள்ள தன்னுடைய தோட்டத்திற்குச் சென்றுவிட்டு, கார் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

Advertisment

ஓமலூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் அவருடைய வாகனத்தை மறித்து ஆவணங்களை காட்டுமாறு கூறினார். அப்போது அவர் தான் ஒரு முன்னாள் எம்பி, முன்னாள் எம்எல்ஏ என்று கூறி காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில், வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. பணியில் இருந்த இரும்பாலை காவல்நிலைய சிறப்பு எஸ்ஐயை கடுமையான ஆபாச சொற்களால் வசை பாடினார். மேலும், அவரை காலால் எட்டி உதைத்தார். பின்னர் சக காவலர்கள் இருதரப்பையும் சமாதானப்படுத்தியதை அடுத்து, அர்ஜூனன் காரில் ஏறி கிளம்பிச்சென்றார்.

Advertisment

இச்சம்பவம் குறித்து இன்று (ஜூன் 29) மதியம் வரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்தனர். இந்நிலையில், மாலையில் சிறப்பு எஸ்ஐ ரமேஷ் அளித்த புகாரின்பேரில், முன்னாள் எம்பி அர்ஜூனன் மீது இதரபிரிவுகள் 294 பி (ஆபாச சொற்களால் திட்டுதல்), 353 (பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் இரும்பாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விரு பிரிவுகளுமே பிணையில் விடக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.