திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக திரைப்பட நடிகை அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாக நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, மணிகண்டனை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல்துறையினர் கடந்த 20 ஆம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகார் அளிக்கபட்டுள்ளதாகவும், புகாரில் கூறிய குற்றசாட்டுகள் உண்மையில்லை எனவும் புகாரில் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை எனவும் எனவே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் இதற்கு நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தான் தயாராக உள்ளதாக ஜாமீன் மனுவில் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நேற்று நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்து. காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்னும் விசாரணை முழுமையாக முடிவடையவில்லை. மணிகண்டன் அமைச்சராக இருந்த போது புகார் அளித்த பெண்ணுடன் ஒன்றாக தங்கியிருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் புகார் அளித்த பெண்ணை மணிகண்டன் மிரட்டியுள்ளார். புகார் அளித்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை மனுதார் மணிகண்டன் சம்மந்தபட்ட பெண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கருத வேண்டும். மேலும் மணிகண்டனை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது எனவே ஜாமீன் வழங்க கூடாது என வாதிடப்பட்டது.
மனுதார் மணிகண்டன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றச்சாட்டு ஆதாரம் இல்லை. அனைத்தும் பணம் பறிக்கும் நோக்கில் உள்ளது. மனுதரார் ஒரு மருத்துவர் மற்றும் முன்னாள் அமைச்சர், இந்த வழக்கில் ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கின்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளார். எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். அதேபோல புகார்தாரரான நடிகை தரப்பில், மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்க கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதி செல்வக்குமார், ஜாமீன் மனு மீதான உத்தரவை தள்ளிவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிபதி செல்வக்குமார், விசாரணை இன்னும் முடிவடையவில்லை எனவே தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது எனவே ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.