
சேலம் அருகே, மாரியம்மன் கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட்ட பட்டியல் சமூக இளைஞரை, சாதிய வன்மத்துடன் முன்னாள் திமுக நிர்வாகி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அருகே உள்ள திருமலைகிரியைச் சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் பிரவீன்குமார் (22). கூலித்தொழிலாளி. அப்பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் தற்போது திருவிழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பிரவீன்குமார், ஜன. 26ம் தேதி இரவு 8.30 மணியளவில், பெரிய மாரியம்மன் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்தார். அப்போது கோயிலுக்கு வெளியே அமர்ந்து இருந்த வெங்கடாசலம், கூழை கவுண்டர் ஆகிய இருவரும், ''நீ ஏன்டா கோயிலுக்குள் வந்தாய்? உங்களை எல்லாம் உள்ளே வரக்கூடாதுனு சொல்லி இருக்கிறோம்ல'' என்று கூறி, அவரை அடிக்கப் பாய்ந்தனர்.
இதையடுத்து, மறுநாள் காலை (ஜன. 27) கோயில் வாசலுக்கு வந்த சேலம் முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் மாணிக்கத்தின் முன்பு, பிரவீன்குமாரை சிலர் அழைத்துச் சென்று நிறுத்தினர். அங்கு மாற்று சமூகத்தைச் சேர்ந்த வெங்கடாசலம், கூழை கவுண்டர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அப்போது மாணிக்கம், வாலிபரை பார்த்து ஆபாச சொற்களால் திட்டியுள்ளார். ''உன்னை யாருடா கோயிலுக்குள் போகச்சொன்னது? நீங்கள் கோயிலுக்கு வரக்கூடாது என்று எத்தனை முறை சொல்வது? தொலைச்சுடுவேன்'' என்று மிரட்டியபடியே வாலிபரை நெஞ்சில் தாக்கியுள்ளார்.
அங்கு பலதரப்பட்ட சமூகத்தினரும் கூடிவிட்ட நிலையில், அப்போதும் ஆக்ரோஷம் அடங்காதவராக மாணிக்கம் அந்த வாலிபரை பதிவு செய்யவே முடியாத அளவிற்கான சொற்களால் திட்டித்தீர்த்தார். கூடியிருந்த பொதுமக்களும் அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கவில்லை. அப்போது வெங்கடாசலம் என்பவரும் பிரவீன்குமாரை சாதி பெயரைச் சொல்லி திட்டியதோடு, “இவனை சும்மா விடக்கூடாது” என்றும் மிரட்டினார்.
இதையடுத்து பிரவீன்குமாரும், அவருடைய பெற்றோரும் மாணிக்கம் உள்ளிட்ட பிரமுகர்களிடம் மன்னிப்பு கேட்டு, இத்தோடு விட்டுவிடும்படி கெஞ்சினர். அப்போது அவர்கள், இனி ஒருமுறை கோயிலுக்குள் நுழைந்தால் தீர்த்துக்கட்டி விடுவோம் என்று மிரட்டி அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, சேலம் தெற்கு ஒன்றிய முன்னாள் திமுக செயலாளர் மாணிக்கம், வெங்கடாசலம், கூழை கவுண்டர் உள்ளிட்ட பத்து பேர் மீது சாதி வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி பிரவீன்குமார் இரும்பாலை காவல்நிலையத்தில் திங்கள்கிழமை (ஜன. 30) புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில், இரும்பாலை எஸ்.ஐ. சீனிவாசன், மாணிக்கம் உள்ளிட்டோர் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், சாதி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகள், குடிமை உரிமைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மாணிக்கத்தை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க கோயிலுக்குள் நுழைந்ததை கண்டித்து, பிரவீன்குமாரை மாணிக்கம் மிரட்டும் காணொளி காட்சிகள் வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் திங்கள்கிழமை (ஜன. 30) வேகமாக பரவியது.
வேங்கைவயல் சம்பவத்தின் சூடு தணிவதற்குள் இப்படியொரு சம்பவம் பொதுவெளியிலும், அரசியல் களத்திலும் சலசலப்பை கிளப்பியதால், சம்பந்தப்பட்ட வாலிபரிடம் இருந்து காவல்துறையினர் புகாரைப் பெற்று சம்பந்தப்பட்ட நபர் மீது வேக வேகமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, மாணிக்கத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிக இடைநீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். அதன்பிறகே அவர் மீது காவல்துறை நடவடிக்கை பாய்ந்துள்ளது.