Skip to main content

காட்டு முயல்களை வேட்டையாடி டிக்டாக்கில் பதிவிட்ட 6 பேருக்கு ரூ. 90 ஆயிரம் அபராதம்!

Published on 04/05/2020 | Edited on 04/05/2020

 

forest six students forest officers


காட்டு முயல்களை வேட்டையாடி, அவற்றைச் சமைத்துச் சாப்பிட்டு அதனை டிக்டாக்கில் பதிவேற்றம் செய்த 6 பேரை பிடித்த வனத்துறையினர், அவர்களுக்கு ரூ 90 ஆயிரம் அபராதம் விதித்தனர். 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுப்புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட பள்ளியில் படித்து வரும் 6 மாணவர்கள், கரோனா ஊரடங்கு சமயத்தில், அங்கிருந்த வனப்பகுதியில் வலை விரித்து காட்டு முயல்களை வேட்டையாடி உள்ளனர். பின்னர், அங்குள்ள வயல்காட்டில் அதனைச் சமைத்து விருந்து நடத்தி உள்ளனர். இதனை வீடியோ படம் பிடித்து டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளனர். 


இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் இக்பால், வனவர் ராமதாஸ் மற்றும் வனத்துறை ஊழியர்கள், மாணவர்கள் 6 பேரையும் பிடித்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முயல்களை வேட்டையாடியதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். 

அதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவின் பேரில், 6 பேரும் சிறுவர்கள் என்பதாலும், பள்ளி மாணவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதாலும், சிறைக்கு அனுப்பாமல், வழக்குப் பதிவு செய்து, தலா ரூ 15 ஆயிரம் வீதம் 6 பேருக்கும் ரூ 90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, அதனை வசூலித்து, வனத்துறையினர் விடுவித்துள்ளனர். 
 

http://onelink.to/nknapp


இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் குருசாமி கூறுகையில், "பட்டுக்கோட்டையில் சிக்கிய 6 பேரும் பள்ளிச் சிறுவர்கள் என்பதாலும், அவர்கள் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்பதாலும் அபராதம் விதித்து, விடுவிக்கப்பட்டனர். கரோனா ஊரடங்கு சமயத்தில் பலரும் விளையாட்டாக வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இது சட்டப்படியான குற்றம். இதில் ஈடுபடுவோர் அபராதம், சிறைத் தண்டனை ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும். மான், காட்டுப்பன்றி, கிளி, அணில், உடும்பு, கொக்கு எனச் சிறிய, பெரிய விலங்குகள், பறவைகள் எதையும் வேட்டையாடுவது சட்டப்படி குற்றம். நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். வனவிலங்குகளை வேட்டையாடுவோர் மீது இனிவரும் காலங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்காத சிறுத்தை! பிடிக்க முடியாமல் தடுமாறும் வனத்துறை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 forest department is struggling to catch the elusive leopard

கடந்த 2ஆம் தேதி மயிலாடுதுறை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளை வரவழைத்து, தனிக்குழு அமைத்து அந்தச் சிறுத்தையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதன்படி, சிறுத்தையின் காலடித்தடம் அது சிறுநீர் கழித்ததற்கான அடையாளம், அதன் கழிவு ஆகியவற்றை அடையாளம் கண்டு, சிறுத்தை மயிலாடுதுறை பகுதியில் நடமாடுவதை உறுதி செய்தனர். அதைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை செய்து வந்த நிலையில், நான்கு தினங்களுக்கு முன் அரியலூர் மாவட்டம் செந்துறை நகரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்தனர். இது குறித்து அரியலூர் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதி இளைஞர்களுடன் சிறுத்தையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர்.

 forest department is struggling to catch the elusive leopard

ஒரு லேத் பட்டறையில் பதுங்கி இருந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியதைப் பலரும் பார்த்தனர். இதையடுத்து சிறப்பு குழுவினர் பெரிய கூண்டை கொண்டு வந்து செந்துரை அருகே உள்ள ஓடை பகுதியில் கூண்டுக்குள் ஆட்டை அடைத்து வைத்தனர். ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு ஆட்டை உணவாக சாப்பிட்டு சிறுத்தை அந்த கூண்டை தேடி வரும் அப்போது அதில் மாட்டிக்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் சிறுத்தை அந்தக் கூண்டுக்குள் வந்து சிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து செந்துறையைச் சுற்றிலும் உள்ள முந்தரிக்காட்டு பகுதிகளுக்குள் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுத்தை அரியலூர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் அல்லது அருகில் உள்ள கடலூர் மாவட்ட பகுதிகளுக்குள் சென்று இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். தற்போது நிலவரப்படி தினசரி ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் வரை சிறுத்தை இரவு நேரங்களில் இடம்பெயர்ந்து சென்றுள்ளது.

 forest department is struggling to catch the elusive leopard

இதனடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட எல்லைய ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் தங்களது கண்காணிப்பைத் தீவிர படுத்தியுள்ளனர். இதனைப்போன்று கடந்த 2013 ஆம் ஆண்டு பெரம்பலூர் நகரை ஒட்டி உள்ள பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பெரம்பலூர் அருகில் உள்ள துறைமங்கலம், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தையைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அப்பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுக்குள் ஆட்டை விட்டு காட்டுப்பகுதியில் வைத்தனர். அப்போது அந்தச் சிறுத்தை ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு அதை கடித்து தின்பதற்காக கூண்டுக்குள் சென்று சிக்கியது. இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அந்தச் சிறுத்தையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இவ்வாறு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரம்பலூர் ,அரியலூர்,மாவட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!